எலிசபெத் அரசிக்கு வைர விழா: குடியரசு அமைப்பினர் எதிர்ப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவை கண்டித்து, குடியரசு அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தினர்.

பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறிய வைர விழா, பிரிட்டன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தேம்ஸ் நதியில், ஆயிரம் படகுகளின் பவனி நடந்தது.லண்டனில், பங்கிங்காம் அரண்மனையையொட்டியுள்ள சாலைகளில், நேற்று, பாப் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த விழாவை சிறப்பித்ததற்காக, லண்டன் தேவாலயத்தில், அரசி எலிசபெத் நன்றி தெரிவித்தார். அதன் பின், பங்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் நின்று, தனது ஆதரவாளர்களை பார்த்து கையசைத்து, பாராட்டு விழாவை நிறைவு செய்து கொண்டார்.முன்னதாக, இவரின் கணவர் பிலிப்புக்கு, சிறுநீரக பையில் ஏற்பட்ட தொற்று காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவர், நேற்றைய விழாவில் பங்கேற்கவில்லை.

எலிசபெத் அரசிக்கு நடக்கும் விழாவை எதிர்த்து, குடியரசு அமைப்பை சேர்ந்த, 1,200 பேர், கடந்த 3ம் தேதி முதல், லண்டனில் போராட்டம் நடத்தினர். வரும் 2025ம் ஆண்டுக்குள், அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே, தங்கள் லட்சியம்’ என, இவர்கள் தெரிவித்துள்ளனர்.