இரண்டு ஜோகூர் போலீஸ் அதிகாரிகள் நிஜாரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் WWW 1 வாகனத் தகடு எண்ணை ஏலத்தில் எடுத்தது மீது முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தமது டிவிட்டரில் விடுத்த அறிக்கை மீது அவரிடமிருந்து வாக்குமூலத்தை வடக்கு ஜோகூர் பாரு போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று பதிவு செய்தனர்.

அந்த மாவட்டத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் டிஎஸ்பி சானாவி முகமட், டிஎஸ்பி சுக்கிமான் அர்ஷாட் ஆகியோரே அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஆவர்.

அவர்கள் ஈப்போவில் உள்ள பேராக் பாஸ் அலுவலகத்திற்கு பிற்பகல் மணி 2.00 வாக்கில் சென்றடைந்தனர். அங்கு அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு முகமட் நிஜாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்கள்.

போலீஸ் அதிகாரிகள் தொடுத்த எல்லா 28 கேள்விகளுக்கும் தாம் பதில் அளித்ததாக பேராக் பாஸ் துணை ஆணையாளருமான முகமட் நிஜார் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“போலீசார் புலனாய்வு செய்துள்ளனர். நான் என் வாக்குமூலத்தைக் கொடுத்து விட்டேன். நான் போலீசாரை மதிப்பதால் அந்த விஷயத்தை நான் அவர்களிடமே விட்டு விடுகிறேன்,” என்றார் அவர்.

தேச நிந்தனைச் சட்டத்தின் 4(1)(பி) பிரிவின் கீழ் அந்த விவகாரம் விசாரிக்கப்படுவதாக முகமட் நிஜார் தெரிவித்தார்.

முகமட் நிஜார் வெளியிட்ட புண்படுத்தும் அறிக்கை மீது ஜோகூர் போலீசாருக்கு 39 புகார்கள் கிடைத்துள்ளதாக திங்கட்கிழமையன்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருந்தார்.

பெர்னாமா

 

 

TAGS: