பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டும் பெர்சே-யும் கலவரத்தை மூட்டும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுவது “தீய அரசியலுக்கு” நல்ல உதாரணம் எனப் பெர்சே வருணித்துள்ளது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் நடப்புத் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் தெரிவித்துள்ள அந்த ஆரூடங்கள் “கெட்ட எண்ணங்கள்- தவறாக வழி நடத்துகின்றவை” என்றும் பெர்சே வழிகாட்டல் குழு கூறியது.
“பெர்சே மீது ஆதாரம் ஏதுமில்லாமல் அந்தக் குற்றச்சாட்டை அவர்கள் சுமத்துவதின் நோக்கம் என்ன என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். அது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி என நாங்கள் கருதுகிறோம்,” என பெர்சே விடுத்த அறிக்கை கூறியது.
“குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்ற அத்தகைய நடவடிக்கைகளும் அவதூறு கூறுவதும் தீய அரசியல் எனக் கருதப்படுகின்றது. அதனால் தான் “கறை படிந்த தீய அரசியலை நிறுத்துமாறு” பெர்சே-யின் எட்டாவது கோரிக்கை வலியுறுத்துகின்றது.
பெர்சே கட்சிச் சார்பற்ற இயக்கம் என அந்தக் குழு வலியுறுத்தியது. தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை கோரி ஜனநாயக நடைமுறைகளுக்கு உதவுவதே பெர்சே-யின் ஒரே நோக்கமாகும்.
டாக்டர் மகாதீர்: பெர்சே 3.0 ‘ஆயத்த நடவடிக்கை’
முஹைடின் சதித் திட்டங்கள் என ஜோடிப்பதற்குப் பதில் வரும் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அது கூறியது.
“தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர், அமைச்சர் என்ற முறையில் மக்களுடைய தேவைகளுக்குப் பங்காற்றுவதே துணைப் பிரதமருடைய முக்கியக் கடமை என்பதை நாங்கள் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.. தமது கட்சியின் அரசியல் நோக்கங்களை அல்லது தமது தனிப்பட்ட நலனை மேம்படுத்துவது அல்ல என்பதையும் நாங்கள் அவருக்கு எடுத்துக் கூற விரும்புகிறோம்.”
அந்தச் ‘சதித் திட்டம்’ பற்றி முதலில் மகாதீர் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். வரும் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான “ஆயத்த நடவடிக்கையே” ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணி என அவர் அதில் எழுதியிருந்தார்.
பிஎன் -னை வீழ்த்துவதற்கு அரபு பாணியிலான ஆர்ப்பாட்டத்தை நடத்த பக்காத்தான் முயலும் என்றும் மகாதீர் சொன்னார்.
முஹைடின் பின்னர் மகாதீர் சொன்னதை ஒப்புக் கொண்டதுடன் பெர்சே 3.0 பேரணி ஒரு வகையான மனோதத்துவப் போர் என்றும் வருணித்தார்.