மலேசியா கொள்முதல் செய்த ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா-வுக்கும் விரிவடைந்துள்ளது.
சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதலில் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்-டுக்கு தரகுப் பணமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 114 மில்லியன் யூரோவில் (457 மில்லியன் ரிங்கிட்) ஒரு பகுதி மால்டா வழியாக சட்டப்பூர்வப் பணமாக மாற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதின் தொடர்பில் பிரஞ்சுக்காரர்களுக்கு சொந்தமான Gifen என்ற நிதி நிறுவனம் விசாரிக்கப்படுவதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒர் எதிர்க்கட்சி உறுப்பினரான எவரிஸ்ட் பார்த்தோலோ கூறினார்.
பெரிமெக்கார் சென் பெர்ஹாட் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவுக்குச் சொந்தமானதாகும்.
Gifen நிறுவனத்தை Jean-Marie Bouvin என்பவர் தோற்றுவித்தார். பிரஞ்சித் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிகளை விற்றதிலும் தைவானுக்கு போர்க்கப்பல்களை விற்றதிலும் கூட Gifen சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இரண்டு பேரங்களைச் சுற்றிலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல கொலைகளும் கூட நிகழ்ந்துள்ளன.
டிசிஎன்( இப்போது டிசிஎன்எஸ்), பிரஞ்சுத் தற்காப்பு அமைச்சு ஆகியவற்றின் ரகசிய அறிக்கைகளையும் ஆவணங்களையும் சோதனை செய்த பிரஞ்சு வழக்குரைஞர்கள் Gifen பற்றித் தெரிந்து கொண்டனர்.
2001ம் ஆண்டு போவின் தோற்றுவித்த Gifenக்கு பிரஞ்சு வேவுச் சேவைகளுடனும் நல்ல தொடர்பு இருந்ததாக பார்த்தோலா குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தில் பிரான்ஸ் கையெழுத்திட்டதும் போவின் அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, மால்டா, மொரிஷியஸ் போன்றவற்றில் நிறுவனங்களை அமைத்து மாற்று வழிகளில் செயல்படத் தொடங்கியதாகவும் அவர் சொன்னார்.
மலேசிய தற்காப்பு அமைச்சு 2002ம் ஆண்டு அர்மாரிஸ் என்னும் நிறுவனத்திடமிருந்து இரண்டு எஸ்எஸ்கே ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது. அப்போது நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்தார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சுவாராம் என்ற மலேசிய மனித உரிமை போராட்ட அமைப்பு சார்பில் டிசிஎன்எஸ்-ஸின் பதிவேடுகளைத் திறப்பதில் வில்லியம் போர்டன், ஜோசப் பிரெஹாம் என்ற இரண்டு பிரஞ்சு வழக்குரைகளர்களும் வெற்றி கண்டார்கள்.
Gifen பற்றித் தமக்குத் தெரியும் என்றும் ஆனால் தாம் நடத்திக் கொண்டிருக்கும் விசாரணையில் அது ஒரு பகுதியா என்பது தமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்று பிரெஹாம் மின் அஞ்சல் வழி தெரிவித்துள்ளார்.
என்றாலும் லஞ்சமும் கையூட்டுக்களும் உலகம் முழுவதும் சென்றுள்ளதை ஆதாரங்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
ரசாக் பகிந்தாவுக்குச் சொந்தமான Terasasi Sdn Bhdக்கு நீர் மூழ்கிக் கொள்முதலுக்கான மலேசியத் தற்காப்பு அமைச்சின் ரகசிய ஆவணங்களுக்காக 38 மில்லியன் யூரோ (142 மில்லியன் ரிங்கிட்) கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் அவற்றுள் ஒன்றாகும்.
பின்னர் அமைக்கப்பட்ட Terasasi Hong Kong Ltd என்ற நிறுவனம் வழியாக அந்தப் பணம் கைமாறியது எனத் தோன்றுவதாக Asia Sentinel என்ற சஞ்சிகை கூறியது.
Gifen “அந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள பணம் கொண்டு செல்லப்படுவதற்கு” பயன்படுத்தப்பட்டதா என்பதையும் மலேசியர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா என்பதையும் பிரஞ்சு புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாகவும் பார்த்தோலோ சொன்னார்.
பொதுக் குத்தகைகளைக் கோரும் போது அதில் வெற்றி பெறும் பொருட்டு Heine என அழைக்கப்பட்ட நிறுவனம் வழியாக போவின் தரகுப் பணத்தைக் கொடுப்பார் என்றும் அந்த மால்டா எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவித்தார்.