‘அம்னோவின் அரசியல் நலனுக்காக’ மாணவர்களுடைய எதிர்காலத்தில் அரசாங்கம் “விளையாடாது” என உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘சிறுபிள்ளைத்தனமாக’ மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிலாங்கூர் பல்கலைக்கழகங்களுக்கான பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன்கள் முடக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டது பற்றி அவர் கருத்துரைத்தார்.
சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சரும் அது போன்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் ராபிஸி கேட்டுக் கொண்டார்.
“பிடிபிடிஎன் கடன்களைக் கொடுப்பதை முடக்குமாறு பொறுப்புள்ள எந்த மனிதரும் உத்தரவிட மாட்டார். ஆகவே பிடிபிடிஎன் எந்த ஒரு அமைப்புக்கும் கடன்களுக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கும் அது போன்று மீண்டும் செய்யாது என அவர் உத்தரவாதம் தர வேண்டும்,” என்றார் அவர்.
அம்னோ அமைச்சர்கள் “தங்களது அரசியல் ஆட்டங்களில் மாணவர்கள் துயரப்படுவதைக் காண்பதில் மகிழ்ச்சி கொள்வதையே” அந்த அத்தியாயம் காட்டுவதாகவும் ராபிஸி குறிப்பிட்டார்.
அதற்கு நேர்மாறாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய 30 மில்லியன் ரிங்கிட் நிதியை அமைத்ததின் மூலம் மாணவர்களுக்கு தாங்கள் முதலிடம் கொடுப்பதை பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் மெய்பித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதனிடையே அந்த அத்தியாயம் இலவசக் கல்வியை வழங்கும் பக்காத்தான் ராக்யாட் கொள்கையை சீர்குலைக்காது என்று பிகேஆர் சிலாங்கூர் இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்மிஸாம் ஜாமான்ஹுரி கூறினார்.
“மக்கள் பக்காத்தானுக்கும் நாட்டுக்கு பொருத்தமான அதன் கல்விக் கொள்கைக்கும் மக்கள் தங்கள் ஆதரவை அளிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்று நாங்கள் நம்புகிறோம்.”
“நாங்கள் அரசியல் எதிரியை தாக்குவதற்கு கல்வியை ஒரு கருவியாக மாற்றி மக்களை மருட்ட மாட்டோம். அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளவும் மாட்டோம்,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அம்னோ தனது சொந்தப் புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருப்பதாக காலித் உணர்ந்த பின்னர் அந்த முடக்கம் நீக்கப்பட்டது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசேன் கூறினார்.
‘முடக்கம் திருப்பித் தாக்கி விட்டது’
“பிடிபிடிஎன் கடனை முடக்குவது என காலித் எடுத்த முடிவை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆதரித்துள்ளார். காலித்தின் முடிவு தீய நோக்கம் கொண்டது. அது திருப்பித் தாக்கி விட்டது.”
“அந்த முடக்கம் நியாயமானது என முஹைடின் கூறினார். இப்போது அந்த முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. அதனால் முடக்கம் நீக்கப்பட்டதை அநியாயமானது என முஹைடின் சொல்வாரா ?” என பாக்கே வினவினார்.
“சிலாங்கூர் கூட்டரசு அரசாங்கத்துக்கு வரிகளாக 90 பில்லியன் ரிங்கிட்டைச் செலுத்துகிறது. அந்தத் தொகை நாட்டின் மொத்த வருமானத்தில் 23 விழுக்காடு ஆகும். ஆனால் மேம்பாட்டு நிதிகளாக
அதற்கு 370 மில்லியன் ரிங்கிட் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.” “நாட்டின் வளர்ச்சிக்கு சிலாங்கூர் ஆற்றும் பங்கிற்கு பொருத்தமாக அந்தத் தொகை இல்லை. கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் மீது பாகுபாடு காட்டுவதை அது தெளிவாக காட்டுகிறது,” என்றார் அவர்.