தெங்: நான் கோ-வைக் காட்டிலும் உறுதியாகச் செயல்படுவேன்

பினாங்கு பிஎன்-னின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாநில முதலமைச்சருமான கோ சூ கூன்-ஐக் காட்டிலும் தாம் உறுதியாக செயல்படப் போவதாக நடப்பு மாநில பிஎன் தலைவர் தெங் சான் இயாவ் கூறியிருக்கிறார்.

கோ பினாங்கிற்கு மேம்பாட்டைக் கொண்டு வந்துள்ள போதிலும் மக்கள் அவருடைய தலைமைத்துவப் பாணி குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் நியூ சண்டே டைம்ஸ் ஏட்டுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிஎன்-னை வழி நடத்திய போது கெரக்கான் பினாங்கில் போட்டியிட்ட எல்லா சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வி கண்டது.

“தலைமைத்துவச் சூழ்நிலையில் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றவராக இருப்பது முக்கியமாகும். இல்லை என்றால் நீங்கள் மிகவும் சர்வாதிகரமாக இயங்குவதாக குற்றம் சாட்டப்படலாம்.”

“என்றாலும் எல்லாக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஒருவர் இருக்கக் கூடாது. என்னுடைய பாணி இது தான்: நான் செவி சாய்ப்பதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் அவசியமானால் நான் உறுதியாகவும் செயல்படுவேன்,” என அவர் சொன்னதாக அந்த ஏட்டில் எழுதப்பட்டுள்ளது.

பினாங்கில் நிகழும் எல்லாத் தவறுகளுக்கும் முன்னைய கெரக்கான் தலைமையிலான மாநில அரசாங்கம் காரணம் என்ற தோற்றத்தை பக்காத்தான் ராக்யாட் ‘உருவாக்கி’ விட்டதை ஒப்புக் கொண்ட தெங் கெரக்கானும் பிஎன்-னும் இப்போது புதிய தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளதாகச் சொன்னார்.

“கடந்த காலத் தலைவர்கள் இப்போது எங்கள் குழுவில் இல்லை. இப்போது புதிய பந்தாட்டம். நாங்கள் புதிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம்.”

பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து மலைச் சாரல் மேம்பாட்டுத் திட்டங்களும் முந்திய பிஎன் அரசாங்கம் அங்கீகரித்தவை என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளதற்கு தெங் பதில் அளித்தார்.

“மாநில அரசாங்கம் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளுக்கு என்ன அடிப்படை என்பதை அறிந்து கொள்ள மாநில ஆட்சி மன்ற கூட்டக் குறிப்புக்களையும் கோப்புக்களையும் ரகசிய நிலையிலிருந்து விடுவிக்க வேண்டும்.”

நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். நாங்கள் அந்த நேரத்தில் அந்தத் திட்டங்களை அங்கீகரித்ததாக நான் நினைக்கவில்லை,” என்றும் தெங் தெரிவித்தார்.

இப்போது பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் இருக்கிறது. அந்த மலைச்சாரல் திட்டங்கள் தொடர்பில் ‘ஏதாவது’ செய்யலாமே என்றார் அவர்.

 

TAGS: