நஸ்ரி: அவசரப்பட்டு சட்டதிருத்தத்தை மீட்டுக்கொள்ளவில்லை

தேர்தல் குற்றச் சட்ட(திருத்த) மசோதாவை அவசரப்பட்டு மீட்டுக்கொள்ளவில்லை, தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஒப்புதலுடன்தான் மீட்டுக்கொள்ளப்பட்டது என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதை மீட்டுக்கொள்ளுமுன்னர் மாற்றரசுக் கட்சித் தலைவருடனும் இசியுடனும் கலந்தாலோசிக்கப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.

ஏப்ரல் 19-இல், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மேலவைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு சட்டமுன்வரைவு மீட்டுக்கொள்ளப்பட்டதற்கு விளக்கம் தேவை என்று எம்.குலசேகரன்(டிஏபி-ஈப்போ பாராட்) கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நஸ்ரி அவ்வாறு விளக்கமளித்தார்.

“மக்களவையில் அது விவாதத்துக்கு வந்தபோது மூன்று திருத்தங்களைச் செய்தோம்.மேலவையில் அவர்கள்(செனட்டர்கள்)மேலும் இரு திருத்தங்கள் செய்ய விரும்பினர்.ஐந்து திருத்தங்களைச் செய்தால் அது அர்த்தமற்றதாகிவிடும்.

“அதை மீட்டுக்கொள்ளலாமா என்று மாற்றரசுக் கட்சித் தலைவரையும் இசி-யையும் கேட்டோம்”, என்றவர் குலசேகரனுக்கு விளக்கம் கூறினார்.

அமைச்சரவை சட்டத்திருத்தத்துக்குத்தான் ஏற்பாடுதான் செய்தது.சட்டத் திருத்தத்தை வரைவதில் அது சம்பந்தப்படவில்லை என்றும் நஸ்ரி தெரிவித்தார்.

ஏப்ரல் 9-இல், மக்களவை முன்வைக்கப்பட்ட அச்சட்ட முன்வரைவு, தேர்தல் நடைமுறைகளில் பல திருத்தங்கள் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.அவற்றுள், வாக்களிப்பு மையங்களைவிட்டு பொதுமக்கள் விலகிநிற்கும் தூரத்தை 50 மீட்டரிலிருந்து 100 மீட்டராக்குவதும் ஒன்று.

-பெர்னாமா

TAGS: