ஜோகூர் ஆட்சியாளர் நிஜாரிடம் சொல்கிறார்: ஜோகூர் மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்

ஜோகூர் சுல்தான் ‘WWW1’ என்ற எண் தகட்டை ஏலத்தில் எடுத்தது மீதான தமது டிவிட்டர் செய்திகளுக்காக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் ஜோகூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்.

டிவிட்டர் வழியாக நிஜார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது உண்மையானதாக இல்லை என சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்காண்டார் ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸிடம் நேற்று கூறினார்.

“நிஜார் உண்மையில் மன்னிப்புக் கேட்க விரும்பினால் அவர் முதலில் என்னுடைய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். காரணம் அந்த மக்களை நிஜார் அவமானப்படுத்தியுள்ளார். அவர் பேசுவதற்கு முன்னர் தமது மூளையைப் பயன்படுத்த வேண்டும்,” என சுல்தான் சொன்னதாக அந்த நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோகூர் ஆட்சியாளர் ‘WWW1’ எண் தகட்டை எடுப்பதற்கு 520,000 ரிங்கிட் ஏலத் தொகையாக குறிப்பிட்டிருந்தார். அந்தத் தொகை 2010ம் ஆண்டு ‘MCA 1’என்ற எண்ணுக்கு கிடைத்த 300,100 ரிங்கிட்டை ஏலத் தொகையை விட அதிகமாகும்.

அந்த ஏலம் குறித்து இணையத்தில் பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. நிஜாரும் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அந்தப் பணம் ஜோகூரில் உள்ள ஏழை மலாய்க்காரர்களுக்கு செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு 20 வீடுகளைக் கட்டிக் கொடுக்க அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் நிஜார் எழுதியிருந்தார்.

அம்னோவும் அரசு சாரா மலாய் அமைப்புக்களும் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து தமது செய்தி யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் நிஜார் அறிவித்துள்ளார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவரைப் போலீசார் இப்போது புலனாய்வு செய்து வருகின்றனர்.

‘அரசமைப்பு உரிமை’

சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவும் நிஜாருடைய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் நேற்று ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பாசிர் பெலாங்கியில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடியதாகவும் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் அதே செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பொது நலனைப் பாதிக்கின்ற விஷயங்கள் மீது அரச குடும்பத்தினர் உட்பட யாருக்கு எதிராகவும் தாம் தொடர்ந்து பேசப் போவதாக நிஜார் அந்த நாளேட்டிடம் கூறினார்.

“நியாயமற்ற செலவுகள் அல்லது நடத்தை போன்ற முழுக்க முழுக்க கற்பனை செய்ய முடியாத பிரச்னையாக அது இருந்தால் நான் தொடர்ந்து பேசுவேன். ஆனால் அதனை நான் மிகவும் மரியாதைக்குரிய வழியில் செய்வேன்,” என அவர் சொன்னதாக அந்த ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

“மலேசியர் என்ற முறையில் அவ்வாறு செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு. அது அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.”

2009ம் ஆண்டு பேராக் அரசமைப்பு நெருக்கடியின் போதும் பேராக் சுல்தானுக்கு எதிராக நிஜார் தேச நிந்தனைக் குற்றம் புரிந்துள்ளதாகவும் அம்னோ குற்றம் சாட்டியது.

 

TAGS: