தற்காப்பு ஆவணங்கள் மீதான அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பிரஞ்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது மீது தற்காப்பு அமைச்சு பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் சமர்பிக்கப்பட்ட அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிரந்தர விதிகள் 18(1)ன் கீழ் லெம்பா பந்தாய் உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்திருந்த அந்தத் தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் நிராகரித்தார்.

பிரஞ்சுக் கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ்-ஸுக்கு எதிராக மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் தொடுத்துள்ள ஊழல் வழக்கில் அதனைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞரான ஜோசப் பிரெஹாம், பிரஞ்சு நிறுவனம்,  தெராசாசி (ஹாங்காங்)லிமிடெட்டுக்கு  36 மில்லியன் யூரோ (142 மில்லியன் ரிங்கிட்) கொடுத்துள்ளதாக மே மாதம் 30ம் தேதி தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து நுருல் அந்தத் தீர்மானத்தைச் சமர்பித்தார்.

நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பற்றிய மலேசியக் கடற்படை மதிப்பீட்டு அறிக்கையின் பிரதிக்காக அந்தப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

TAGS: