மலேசியா இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிககள் வாங்கியதில் ஊழல் நிகழ்திருப்பதாகக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் பிரான்சில் நடைபெற்றுவரும் விசாரணை குறித்து வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்த்தரப்பு எம்பி ஒருவர் விரும்புகிறார்.
“அந்த விசாரணையில் இதுவரை தெரியவந்திருப்பது என்ன, எவ்வளவுக்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன,கிடைத்துள்ள ஆதாரங்கள் குறிப்பிட்ட கொள்முதலில் நம் அதிகாரிகள் தவறுகள் செய்ததைக் காட்டுகின்றனவா என்பதையெல்லாம் அவர் நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என்று பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா கவனம் செலுத்தும் அளவுக்கு அது “ ஒரு கடுமையான விவகாரமல்ல” என்று நேற்று அனிபா குறிப்பிட்டுள்ளது பற்றிக் கருத்துரைத்தபோது டிஏபி எம்பி அவ்வாறு கூறினார்.
அமைச்சர் அதனைக் கடுமையான விவகாரமாகக் கருதாதது ஏன் என்பதையும் கோபிந்த் அறிய விரும்புகிறார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அனிபா,வழக்கை எதிர்கொள்ள மலேசியா தேவையான ஆயத்தங்களைச் செய்யும் என்றும் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் அது தயாராக இருக்கும் என்றும் கூறினார்.ஆனால், பிரெஞ்ச் தூதரகத்திடமிருந்து அதன் தொடர்பில் எந்தத் தகவலும் இதுவரை வந்துசேரவில்லை என்றார்.
ஒரு வழக்குரைஞரான கோபிந்திடம் இந்த விளக்கம் எடுபடவில்லை.
“இது பொருத்தமான வாதமாக தெரியவில்லையே.நம் நாடு சம்பந்தப்பட்ட ஒரு விசாரணை நடைபெறுகிறது.பிரெஞ்ச் தூதரகம் விளக்கம் கொடுக்கும்வரை நாம் பேசாமல் இருக்க முடியுமா, என்ன?”, என்றவர் வினவினார்.
இவ்விசயத்தில் நாட்டின் முதன்மை சட்ட அதிகாரியான சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் தலையிட்டு நாட்டின் நன்மதிப்பு சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே நிலவரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அனிபாவுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கோபிந்த் வலியுறுத்தினார்.
“நாம் அதில் பங்குபெற வேண்டும்,நம்மைத் தற்காக்க நம் பிரதிநிதிகள் அங்கிருக்க வேண்டும்.விசாரணையில் தெரியவருவனவற்றை உடனுக்குடன் நமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
“இதைச் செய்யாவிட்டால் இவ்விசயத்தில் நாம் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகத்தான் அர்த்தமாகும்.பிறகு அரசாங்கம்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்”.
இரண்டு நீர்மூழ்கிகள் கொள்முதலில் மலேசியத் தரப்புக்களுக்கு பிரஞ்சுத் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் கையூட்டுக்களைக் கொடுத்ததாக கூறப்படுவது மீது அந்த பிரஞ்சு நிறுவனத்தின் மீது உள்நாட்டு மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அண்மையில் சுவாராமின் வழக்குரைஞர் ஜோசப் ப்ரெஹெம், பிரெஞ்ச் விசாரணை அதிகாரிகள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நெருக்கமான தொடர்புவைத்துள்ள ஒருவருக்குச் சொந்தமான நிறுவனம் இரகசிய ஆவணங்களை யூரோ36மில்லியனுக்கு(ரிம142மில்லியன்) டிசிஎன்எஸ்ஸுக்கு விற்றதைக் கண்டிபிடித்துள்ளதாக தெரிவித்தார்.
ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட அந்நிறுவனம்,தெராசாசி லிமிடெட், நஜிப்பின் நண்பரான அப்துல் ரசாக் பாகிண்டாவுக்கும் அவரின் தந்தையார் அப்துல் மாலிம் பாகிண்டாவுக்கும் சொந்தமானது.