பிரதமருடைய எதிர்கால மருமகன் மீது 20 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடிக் குற்றச்சாட்டு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வியைத் திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள கஸக்ஸ்தான் பிரஜையான டேனியர் நஸர்பாயேவ், (Daniyar Nazarbayev) மோசடி செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் கூறுகின்றன.

அவர் தமது மாற்றான் தந்தையிடமிருந்து ( step-father ) 20 மில்லியன் டாலர் (62 மில்லியன் ரிங்கிட்) பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றை மோசடி செய்ததுடன் போலிப் பத்திரங்களைப் பயன்படுத்தி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளதாகவும் மான்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

தாம் கஸக்ஸ்தான் உயர் நிலைப் பள்ளிக் கூடம் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் டேனியர் ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும் அந்த நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிப்பதாக நியூ யார்க் போஸ்ட் ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒர் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துள்ளார். ஆனால் அவர் தமது படிப்பை முடிக்கவில்லை.

2010ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற டேனியர் இன்னும் அந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பட்டதாரிகள் பட்டியலில் இருப்பது கொலம்பிய பல்கலைக்கழகப் பதிவேடுகளிலிருந்து தெரிய வருகின்றது.

மாற்றான் தந்தை அந்த வழக்கைத் தொடுத்துள்ளார்

கஸக்ஸ்தான் அதிபர் நுருசுல்தான் நஸர்பாயேவ்-வின் சகோதரரும் டேனியரின் முன்னாள் மாற்றான் தந்தையுமான போலாட் நஸர்பாயேவ் அந்த நீதிமன்ற ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

24 வயதான டேனியரும் அவரது தாயாருமான மைராவும், தாம் அவர்கள் மீது வைத்திருந்த  நம்பிக்கையைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிளாஸா ஹோட்டல் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டையும் வால் ஸ்டிரீட்டில் உள்ள இதர இரண்டு பல மில்லியன் டாலர் பெறும் அடுக்கு மாடி வீடுகளையும் மோசடி செய்துள்ளதாக போலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

“டேனியர் அந்த அடுக்குமாடி வீட்டை தமது மாற்றான் தந்தையின் பெயரில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் தமது தாயாரின் பெயரை அதில் சேர்த்துக் கொண்டார். எட்டு மாதங்களுக்குப் பின்னர் தாயார் அதனை டேனியருக்கு ஒரு டாலருக்கு விற்றுள்ளதாக நீதி மன்ற ஆவணங்கள் கூறுவதாக,” நியூயார்க் போஸ்ட் தெரிவித்தது.

டேனியரின் உண்மையான குடும்பப் பெயர் கெஸிக்பாயேவ்-வாக இருக்க வேண்டுமே தவிர நஸர்பயேவ்-வாக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்ற ஆவணங்கள் காட்டுவதாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது. நஸர்பயேவ் என்ற குடும்பப் பெயர் கஸக்ஸ்தானில் மிகவும் செல்வாக்கு உடையதாகும்.

2001ம் ஆண்டு மைரா போலாட்டைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் டேனியரின் குடும்பப் பெயரைச் சட்டப்பூர்வமாக மாற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மைரா ‘கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவை உட்பட பல குற்றங்களுக்காக’ அதிகாரிகளினால் தேடப்படுவதை போலாட் கண்டு பிடித்ததாகக் கூறப்பட்ட பின்னர் அந்தத் திருமணம் ரத்துச் செய்யப்பட்டது.

டேனியர் ‘காணப்படவில்லை’

டேனியரை மலேசியா உட்பட ஐந்து நாடுகளில் கண்டு பிடிப்பதற்கு போலாட்டின் வழக்குரைஞர்கள் முயற்சி செய்ததாகவும் நியூயார்க் போஸ்ட் கூறியது.

அவருக்கும் நஜிப்பின் புதல்வி நூர்யானா நஜ்வாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

 

TAGS: