பிறந்த நாள் கவலைகள் மரணத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்

பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலையினால், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மரணம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம், ஒரு ஆய்வு நடத்தியது. பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தத்தால், 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகின்றன.

60 வயதுக்கு குறைவானவர்களுக்கு, இது போன்ற பாதிப்புகள், குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, பிறந்த நாள் வருத்தத்தின் போது, பக்கவாதம் ஏற்படுகிறது. பிறந்த நாளையொட்டி ஏற்படும் வருத்தம், பலரை தற்கொலைக்கு தூண்டுகிறது.

இன்னும் சிலருக்கு, புற்றுநோயையும் தோற்றுவிப்பதாக, இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஜுரிச் பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர் விலெட்டா குறிப்பிடுகையில், “பிறந்த நாளில், பலர் மரணமடைகின்றனர் என்ற எங்கள் ஆராய்ச்சியை, பலர் இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், பிறந்த நாளில், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் மரணமடைந்துள்ளதை, நாங்கள் ஆதாரமாக காட்டுவோம்’ என்றார்.