2010 ஏப்ரல் 26-இல், பதின்ம வயது அமினுல்ரஷிட் அம்சா, காரில் துரத்திச் செல்லப்பட்டு முடிவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறப்புக்கு போலீஸ் கார்ப்பரல் ஜெனாய்ன் சுபிதான் காரணம் என்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றவியல் சட்டத்தின் பகுதி 304(அ)-இன்கீழ், அவர் ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார் என நீதிமன்றம் முடிவு செய்தது. கூடின பட்சம் 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் இச்சட்டம் இது.
நீதிபதி லத்திபா முகம்மட் தஹார், ஜெனாய்னுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை நிறுத்திவைத்து அவரை ரிம10,000 பிணையில் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.
ஜெனாய்ன், ஷா ஆலம் ஜாலான் தாரியான் 11/2-இல், பின்னிரவு மணி 1.10-க்கும் 2-க்குமிடையில் அக்குற்றத்தைப் புரிந்தார் என்று நீதிபதி லத்திபா கூறினார்.
ஜெனாய்ன் ஒரு சப்-மெஷின் துப்பாக்கியால் சுட்டதில் அதிலிருந்து புறப்பட்டுச் சென்ற 21 தோட்டாக்களில் ஒன்றுதான் அமினுல்ரஷிட்டின் உயிரைப் பறித்தது என்பதை அரசுத்தரப்பு ஐயம்திரிபற நிறுவியுள்ளது என்றாரவர்.
ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் தானியங்கி துப்பாக்கியால் சுடுவது “ஆபத்தானது”, “உயிரைப் பறிக்கக்கூடியது” என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
இறந்துபோனவர் ஓட்டிச் சென்ற கார் ஜாலான் தாரியானில் சென்றபோது வேகம் குறைந்து மெதுவாக செல்லத்தொடங்கியது என மற்ற போலீஸ்காரர்கள் சாட்சியம் அளித்திருப்பதால் ஜெனாய்ன் துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியது.
“ஜாலாம் தாரியானில் இறந்துபோனவரின் காரையும் போலீஸ் கார்களையும் தவிர வாகனங்கள் அந்த நேரத்தில் இல்லை என்பதால் அங்கு ஆபத்தான சூழல் நிலவவில்லை என்பதைக் குற்றவாளியே ஒப்புக்கொண்டிருக்கிறார்.”
போலீஸ் கார்களால் விரட்டிச் செல்லப்பட்ட அமினுல்ரஷிட், அவரது வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில், அரசுத் தரப்பில் டிபிபி முகம்மட் டுசுக்கி மொக்தார், இடாம் அப்துல் கனி, அடில்லா அஹ்மட் ஆகியோரும் ஜெனாய்னுக்காக வழக்குரைஞர்கள் எம்.ஆதிமூலம், சலிம் பஷிர், ஹலிம் அஷ்கார் முகம்மட் ஹில்மி ஆகியோரும் முன்னிலை ஆனார்கள்.