சிலாங்கூர் இலவசக் கல்வித் திட்டத்துக்கு உதவியாக நிறுவனங்களுக்கு இடையில் நிதிகள் மாற்றிக் கொள்ளப்படும்

இலவச உயர்நிலைக் கல்வியை வழங்கும் சிலாங்கூரின் முன்னோடித் திட்டத்துக்குத் தேவையான 30 மில்லியன் ரிங்கிட்,  MBI என்ற மந்திரி புசார் இணைக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூருக்கு மாற்றி விடப்படும்.

அதனால் நிதிகளைத் திரட்டுவதற்கு யூனிசெல்-லுக்குச் சொந்தமான நிலத்தை ‘விற்க’ வேண்டிய அவசியமில்லை  என மாநில பொருளாதார ஆலோசகர் அலுவலகத் தலைமை நிர்வாகி ராபிஸி இஸ்மாயில் கூறினார்.

“அந்த நிலத்துக்கு ஈடாக யூனிசெல்-லுக்கு அந்த ரொக்கப் பணத்தை கடனாக அல்லது முன்பணமாக MBI கொடுக்கும்,” என ராபிஸி நேற்றிரவு பிகேஆர் செராமா நிகழ்வின் போது கூறினார்.

யூனிசெல்,  MBI-யின் துணை நிறுவனம் என்பதால் இந்த ஏற்பாடு சாத்தியமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“அந்த 200 ஹெக்டர் நிலம் முதலில் யூனிசெல்-லின் இரண்டாவது கட்டத்துக்காக கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மேம்பாடு ஏற்படவில்லை. ஆகவே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது அந்த நிலம் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டது,” என்றார் அவர்.

அந்த நிலத்தின் மதிப்பு MBI முன்பணமாகக் கொடுக்கும் 30 மில்லியன் ரிங்கிட்டை விட அதிகமாகும். ஆனால் அந்த “முழுத் திட்டமும் மீண்டும் மேம்படுத்தப்படும் போது அதன் உண்மையான மதிப்பு” தெரிய வரும்.”

பணத்தைத் திரட்டுவதற்கு மாநில அரசாங்கம் தனது சில சொத்துக்களை விற்க வேண்டியிருக்கும் என முதலில் கருதப்பட்டது.

குயிஸுக்கு மானியங்கள்

சிலாங்கூரின் இன்னொரு பல்கலைக்கழகமான குயிஸ் என்ற அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அது போன்ற ஏற்பாடு சாத்தியமல்ல என்றும் ராபிஸி சொன்னார்.

“குயிஸ் MBI-க்கு சொந்தமானது அல்ல. அதனை சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம் நிர்வாகம் செய்கிறது. மானியங்கள் வழியாக அதற்கு நிதி அளிக்கப்படுகிறது.”

ராபிஸ், பங்சார் உத்தாமா இணைய வானொலிக்கு அளித்த பேட்டியில் அந்த 30 மில்லியன் ரிங்கிட் யூனிசெல்-லுக்கும் குயிஸுக்கும் இடையில் பிரித்துக் கொள்ளப்படும் என ஏற்கனவே கூறியுள்ளார்.

இலவசக் கல்வித் திட்டம் மீது தாம் விரைவில் அறிவிப்புக்களை செய்யப் போவதாகவும் யூனிசெல் வாரியத்தைச் சந்திக்கப் போவதாகவும் நேற்று மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியுள்ளார்.

 

TAGS: