எகிப்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அவர் ஆட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து இராணுவ உயர்மட்ட மன்றம், இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தேர்தல் நடத்தக்கோரி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில் 508 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
இந்நிலையில் தற்போது அதிபர் தேர்தலும் நடந்துள்ளது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், மறுதேர்தல் நடைபெற உள்ளது. முபாரக் ஆட்சியில் பிரதமராக இருந்தவர், அதிபர் தேர்தலில் போட்டியிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல், விகிதாசார முறைப்படி நடக்காததால், இது அரசியலமைப்புக்கு முரணானது என கூறிய எகிப்து உச்சநீதிமன்றம், நாடாளுமன்ற தேர்தல் செல்லாது. எனவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என நேற்றைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.