WWW1 எண் தகடு மீது நிஜார் ஜோகூர் சுல்தானுக்கு விளக்கமளிப்பார்

WWW1 எண் தகட்டை ஜோகூர் ஆட்சியாளர் 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியது மீது அண்மையில் தாம் தெரிவித்த கருத்துக்களை சுல்தானிடம் விளக்குவதற்கு அவருடைய பேட்டியை நாடியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்திருக்கிறார்.

“நான் அரண்மனையின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

ஆகவே அந்த புக்கிட் கந்தாங் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது தாம் ஆத்திரமடைந்துள்ளதாக ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்காண்டார் வெளியிட்ட அறிக்கை பற்றிக் கருத்துக் கூற நிஜார் மறுத்து விட்டார்.

அந்த எண் தகட்டை வாங்குவதற்குச் செலவு செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு ஜோகூரில் உள்ள ஏழை மக்களுக்கு 20 குறைந்த விலை வீடுகளைக் கட்டியிருக்கலாம் என நிஜார் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஜோகூர் சுல்தானிடம் அவர் என்ன சொல்ல எண்ணம் கொண்டுள்ளார் என கேட்ட போது,” நாம் அரண்மனையின் கடிதத்திற்காக காத்திருப்போம். நாம் காத்திருப்போம்,” என அவர் பதில் அளித்தார்.

நேற்று ஜோகூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த சுல்தான் இப்ராஹிம், நிஜார் தமக்குத் தெரியாத விஷயங்கள் மீது கருத்துச் சொல்லக் கூடாது என்றும் அந்த முன்னாள் மந்திரி புசார் “ஏதும் அறியாதவர் மேலோட்டமான சிந்தனையைக் கொண்டவர்” என்றும் கூறினார்.

நிஜாருடைய கருத்துக்கள் ஜோகூர் மக்களை அவமானப்படுத்துவதாகும். அதனால் அந்த மாநில மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் ஏற்கனவே சுல்தான் தெரிவித்துள்ளார்.

தமது டிவிட்டர் செய்தியை முக்கிய ஊடகங்கள் குறிப்பாக அம்னோவுடன் தொடர்புடைய உத்துசான் மலேசியா நாளேடு திரித்துக் கூறுவதாக குறிப்பிட்டு நிலைமையை விளக்குவதற்கு சுல்தானுடைய பேட்டிக்கு தாம் விண்ணப்பித்துள்ளதாகவும் கடந்த செவ்வாய்க் கிழமை நிஜார் கூறினார்.

 

TAGS: