பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி (விரிவாக)

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன் கூறினார்.

2007-இல் விசாரணை அற்ற ISA சட்டத்தில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் இண்டாரப் போராட்டத்தை அனைத்துலக ரீதியில் எடுத்துச் செல்வதற்காகவும் நாட்டைவிட்டு வெளியேறிய வேதமூர்த்தி இப்போது ஐநா வழங்கிய பயண ஆவணத்தை வைத்து பயணம் செய்து வருகிறார்.அவரது மலேசியக் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

“அந்த ஐநா ஆவணம் மலேசியா தவிர எல்லா நாடுகளுக்கும் செல்லலாம் எனக் கூறுகிறது. ஆனால், எது நடந்தாலும் எதிர்கொள்ள நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்”, என்று கணேசன் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

அதில், மலேசிய மண்ணை மிதித்ததும் அவர் கைது செய்யப்படலாம் என்ற குறிப்பும் அடங்கியிருப்பதாக கணேசன் தெரிவித்தார்.

நாடு திரும்பியதும் வேதமூர்த்தி, நாடு முழுக்கப் பயணம் செய்து இண்ட்ராப் வழக்கு பற்றி விளக்குவார்.

ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் வம்சாவளியினர் ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக ரிம1 மில்லியன் கேட்டு இண்ட்ராப் அவ்வழக்கைத் தொடுத்துள்ளது.

வழக்கின்வழி “பணம் கிடைக்கும் என உறுதிகூற” இண்ட்ராப்  தயாராக இல்லை என்பதை வலியுறுத்திய கணேசன் (இடம்) அதன் தலையாய நோக்கம் “வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தவற்றைச் சரிசெய்வதுதான்” என்றார்.

“பணம் எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் இந்தியர்களை ஏமாற்ற முயல்வதாக பலர் சொல்லி வருகிறார்கள். வாக்குகள் பெறுவதற்காக நாங்கள் இதைச் செய்யவில்லை, மாற்றத்தை உண்டுபண்ணத்தான் செய்தோம்”, என்றாரவர்.

TAGS: