அரசியல் புரட்சி மட்டும் விரும்பத்தக்க விளைவுகளைக் கொண்டு வராது என பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார்.
“அரசியல் புரட்சியுடன் சமூகப் புரட்சியும் சிந்தனை மாற்றங்களும் ஏற்பட வேண்டும். நாம் வலுவான அமைப்புக்களை தோற்றுவிக்க வேண்டும். அரசியல் முறையைப் பாதுகாக்கக் கூடிய புனிதமான பண்புகளையும் நடைமுறைகளையும் வலியுறுத்த வேண்டும்,” என புத்ரா உலக வாணிக மய்யத்தில் ‘Fiqh Mentaati Pemimpin’ அனைத்துலகக் கருத்தரங்கை நேற்றிரவு தொடக்கி வைத்த அவர் சொன்னார்.
துனிசியா, எகிப்து, லிபியா, ஏமன் ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள அரசியல் புரட்சியும் சிரியாவிலும் பாஹ்ரெய்னிலும் நிகழும் சமூக எழுச்சியும் இஸ்லாம் மீது மேற்கத்திய உலகம் கொண்டுள்ள எண்ணத்தைச் சரி செய்யப் போவதில்லை குறிப்பாக இஸ்லாம் மீதான அச்சத்தை போக்கப் போவதில்லை என்றார் அவர்.
“அரபு உலகில் அரசியல் புரட்சியை புதிய அரசியல் புத்தெழுச்சி எனப் பெருமையடித்துக் கொண்டவர்கள், அரசியல் புரட்சி மட்டும் விரும்பத்தக்க விளைவுகளைக் கொண்டு வராது என்ற உண்மை நிலையை இப்போது ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.”
மத்திய கிழக்கு நிலவரம் உண்மையில் இஸ்லாம் மீது மற்றவர்கள் மோசமான கண்ணோட்டத்தைப் பெறுவதற்கே வழி வகுத்து விட்டது எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
2010ம் ஆண்டு டிசம்பர் தொடக்கம் இது வரையில் மத்திய கிழக்கில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. பொருளாதாரம் இன்னும் சீர்குலைந்துள்ளது. மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
“ஆகவே கருத்துக்களைத் தெரிவிப்பதில் மிதவாதப் போக்குப் பின்பற்றப்பட வேண்டும். தீவிரவாதங்கள் தவிர்க்கப்பட்டு மக்கள் நலன்கள் அரசியல் நலன்களுக்கு மேலாக வைக்கப்பட வேண்டும்.”
‘தலைவர்கள் திறந்த மனதுடன் இயங்க வேண்டும்’
தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நல்ல உறவுகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கருத்துக்களுக்கு செவி சாய்க்கப்பட வேண்டும் என்றும் நஜிப் தமது உரையில் வலியுறுத்தினார்.
“இலட்சியமும் நோக்கமும் தலைவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். அவை சரியான முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்டியாக அமையும். மக்களும் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர்.”
“கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றும் ஆற்றலைப் பொறுத்தே முஸ்லிம் தலைமைத்துவத்தின் தரம் பார்க்கப்படுகிறது.”
“தலைவர்கள் திறந்த மனத்தைக் கொண்டிருக்க வேண்டும். கண்டனங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதோடு அறிவுரைகளுக்கும் செவி சாய்க்க வேண்டும்,” என்றும் நஜிப் தெரிவித்தார்.
பெர்னாமா