ஜயிஸ்: அரசியல்வாதி பேச்சுகளுக்கு இனி அனுமதி இல்லை

சிலாங்கூரில் உள்ள 2081 தொழுகை இல்லங்களிலும் 380 பள்ளிவாசல்களிலும் அரசியல்வாதிகள் ‘செராமா’(உரை) நிகழ்த்துவதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்) இயக்குனர் மர்சுகி உசேன் இன்று கூறினார்.

“முன்பு அனுமதி பெற்றவர்கள் அந்த அனுமதி காலவதியான பின்னர் அதைப் புதுப்பிக்க முடியாது. இனி, அவர்கள் மாநிலப் பள்ளிவாசல்களிலும் தொழுகை இல்லங்களிலும் உரைநிகழ்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்”, என்றாரவர். 

சிலாங்கூர் சுல்தான் ஜூன் 22-இல் விடுத்த சுற்றறிக்கைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் பள்ளிவாசல்களிலும் தொழுகை இல்லங்களிலும் உரைநிகழ்த்த தடை விதிக்கப்படுவதாக மர்சுகி,  ஷா ஆலமில் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சுல்தான் ஷாரபுடின் இட்ரிஸ் ஷாவுக்கு அரசியல்வாதிகள் பள்ளிவாசல்களிலும் தொழுகை இல்லங்களிலும் உரைநிகழ்த்துவது பிடிக்கவில்லை என்றாரவர்.

தடையை மீறுவோர்மீது ஜயிஸ் நிர்வாகச் சட்டம் பகுதி 119(1)-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். அச்சட்டம் குற்றவாளிகளுக்கு ரிம3,000 அபராதம் அல்லது ஈராண்டு சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வகை செய்கிறது.

– Bernama

TAGS: