லினாஸ் மீதான பிஎஸ்சி அறிக்கை மக்களவையில் தாக்கல்

லினாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பகாங், கெபெங்கில் உள்ள அந்த அரியமண் ஆலை மீது ஆய்வுநடத்தி பரிந்துரைகள் வழங்க மார்ச் 30-இல் அமைக்கப்பட்ட அக்குழுவுக்கு மூன்றுமாத அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், அதற்கு முன்பே அது அறிக்கையைத் தயாராகிவிட்டது.

ஆனால், அறிக்கையில் இடம்பெற்றுள்ள தாகவல்கள் நாளைக் காலை மணி 11.30க்குமுன் வெளியிடப்படமாட்டா என்று மக்களவைத் துணைத் தலைவர் வான் ஜுனாய்டி ஜாப்பார் கூறினார். மக்களவை அதன்மீது விவாதம் நடத்தும்வரை அறிக்கை வெளியிடப்படமாட்டாது.

ஆனாலும், பிஎஸ்சி,பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது அரசாங்கம் பொதுமக்களுடன் ஆலோசனை கலக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக இதற்குமுன் கூறப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட திட்டங்கள் அரசியலாக்கப்படாமலிருக்க அவை பற்றிய உண்மைகளை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் கூறியிருந்தது.

பிஎஸ்சி குழுவின் தலைவர், உயர்கல்வி அமைச்சர் முகம்மட் காலிட் நோர்டின்.குழு உறுப்பினர்களாக அப்துல் ரஹ்மான் டாஹ்லான்(பிஎன்-கோத்தா பெலுட்),டெங் பூன் சூன்( பிஎன்-தெப்ராவ்),நன்சி சுக்ரி(பிஎன்-பாத்தாங் சாடோங்), லியாங் டெக் மெங்(பிஎன்-சிம்பாங் ரெங்காம்), சுல்கிப்ளி நூர்டின்(சுயேச்சை- கூலிம் பண்டார் பாரு) ஆகியோர் உள்ளனர்.

மாற்றரசுக் கட்சி எம்பிகள் மூவருக்கும் அதில் இடம் வழங்கப்பட்டது.ஆனால், அவர்கள் பிஎஸ்சி அதன் விசாரணையை முடிக்கும்வரை ஆலையில் வேலையை நிறுத்தி வைக்க அரசாங்கம் மறுத்துவிட்டதால் குழுவில் கலந்துகொள்வது நேரத்தை விரயமாக்கும் செயல் என்றுகூறி ஒதுங்கிக் கொண்டனர்.