இசா ‘சித்தரவதைக் குறிப்புக்கள்’ பற்றி விவாதிக்க நாளை சுஹாக்காம் கூடுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குறிப்புக்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கையை நாளை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் விவாதிக்கும்.

கமுந்திங் முகாமிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அந்தக் குறிப்புக்களை மலேசியாகினி அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த விவகாரம் ஆணையத்தின் வழக்கமான கூட்டத்தில் விவாதிக்கப்படுமென ஆணையர் முகமட் ஷாஆனி அப்துல்லா கூறினார்.

“நாளை ஆணையம் இறுதி முடிவு எடுக்காது என்றாலும் புகார்கள் பிரிவு விசாரணைகளை தொடங்க முடியும். அதனை எப்படிச் செய்வது என்பதை நாங்கள் நாளை விவாதிப்போம்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

அந்தப் பிரிவு அந்தக் குறிப்புக்கள் உண்மையானவையா என்பதைக் கண்டறிய தனது விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுடன் பேச வேண்டியிருக்கும். அத்துடன் போலீஸ், மருத்துவர்கள் போன்ற சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.

“அந்தக் கூற்றுக்களுக்கு அடிப்படை இருந்தால் வழக்குத் தொடருவது தொடர்பில் நாங்கள் போலீசுக்கும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் ஆலோசனை கூற முடியும்.”

தாங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்த கைதிகளைக் காண்பதற்கு சுஹாக்காம் ஆணையர்கள் கமுந்திங் தடுப்பு முகாமுக்கு கடந்த மாதம் சென்றிருந்த போது அந்தக் குறிப்புக்கள் சுஹாக்காமிடம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

கடந்த மாதம் அந்த முகாமின் ஊழியர் ஒருவர் வெளியில் கடத்திக் கொண்டு சென்ற அதே குறிப்புக்களே அவை என மலேசியாகினி உறுதி செய்துள்ளது. அந்தக் குறிப்புக்கள் அந்தச் செய்தி  இணையத் தளத்துக்கு கொடுக்கப்பட்டன.

இசா-வின் கீழ் இன்னமும் மொத்தம் 45 கைதிகள் கமுந்திங் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கடைசி நபர் 2014ம் ஆண்டு விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

TAGS: