பிஎஸ்சி: லினாஸ் தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குங்கள்

Lamp என அழைக்கப்படும் அரிய மண் தொழில் கூடம் பெரிய விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படவேண்டும் என அந்த தொழில் கூடம் மீது அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூறுகிறது.

700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்பட்டுள்ள அந்தத் தொழில் கூடம் அறிவியல் உண்மைகள், சட்டப்பூர்வ விளக்கங்கள், நிபுணர்கள் வழங்கிய தகவல்கள் ஆகியவற்றின்  அடிப்படையில் பார்த்தால் அணு நிலையம் அல்ல என அது தெரிவித்தது.

நேற்று நாடாளுமன்றத்தில்  சமர்பிக்கப்பட்ட அதன் அறிக்கையில் அந்த விவரங்கள் காணப்படுகின்றன.

“அந்த தொழில் கூடம் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு வழங்கியுள்ள அங்கீகாரத்துக்கு இணங்க ரசாயனத் தொழிற்சாலை ஆகும். அது அரிய மண் பொருட்களைத் தயாரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.”

“இதனிடையே வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரத் துறை அதனைத் தயாரிப்புத் தொழில் கூடமாக வகைப்படுத்தியுள்ளது. அதே வேளையில் 1974ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் அதனை ரசாயனத் தொழில் கூடமாக சுற்றுச்சூழல் துறை குறிப்பிட்டுள்ளது,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லினாஸ் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களில் உரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கப் பொருட்கள் காணப்பட்டாலும் அவை அணு எரி பொருட்கள் அல்ல. அவை தொடர்பில் மலேசியாவில் பல விதிமுறைகள் அமலில் உள்ளன. பெரும்பாலான நாடுகளில் அந்த விதிமுறைகள் இல்லை.

அந்தத் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களில் உள்ள தோரியம் மக்களுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு தாக்கம் இருப்பது இயலாத காரியம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

 

TAGS: