ஸ்கார்பின் விசாரணை: ஜுன் 26ம் தேதி அரசாங்கம் பதில் அளிக்கும்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து இரண்டு ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலான தனது மௌனத்தை அரசாங்கம் விரைவில் கலைக்கவிருக்கிறது.

“அந்த விவகாரம் மீது ஜுன் 26ம் தேதி நான் அங்கு பதில் அளிக்கப் போகிறேன்,” என மக்களவை அமைந்துள்ள மண்டபத்தை சுட்டிக் காட்டிய  தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில், பிரஞ்சுக்காரர்களுக்கு ரகசியமான மலேசியக் கடற்படை ஆவணம் ஒன்று விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்தார்.

அவருக்கும் மற்ற பல மலேசிய அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பிரஞ்சு நீதிமன்றம் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சபீனா (நீதிமன்ற அழைப்பாணைகள்) பற்றியும் ஸாஹிட் ஹமிடியிடம் வினவப்பட்டது. பதில் அளித்த அவர், அதற்கும் அதே தேதியில் பதில் அளிப்பதாகத் தெரிவித்தார்.

நிருபர்கள் தொடர்ந்து நெருக்கிய போது “26ம் தேதி வரை காத்திருங்கள்” என்று மட்டும் அவர் சொன்னார்.

“நான் அந்த விவகாரத்தை முன் கூட்டியே தெரிவிக்க முடியாது. நீங்கள் அப்போது அங்கு வந்து கேட்க வேண்டும்,” என்றார் அவர்.

 

TAGS: