அண்டைவீட்டாரைக் கண்டு ஆச்சரியமடைந்த இண்ட்ராப்

இண்ட்ராபும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக  புத்ராஜெயாவால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பும்  அண்டைவீட்டுக்காரர்கள் ஆகியிருக்கும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டு பிரதமர் துறையின்கீழ் செயல்பட்டுவரும் அமைப்பு தங்களின் அண்டைவீட்டுக்குக் குடிவந்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார் இண்ட்ராப்பின் நடப்பில் தலைவர் பி.உதயகுமார்.

“பிரதமரின்கீழ் உள்ள ஒரு அலுவலகம் நிர்வாக மையத்துக்கு வெளியிலிருந்து செயல்படுவது இதுவே முதல் முறையாகும்.

“இது, இண்ட்ராப் போன்ற இந்திய சமூகத்தின் அடிமட்ட அமைப்புகளுடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவதாகக் காண்பித்துக்கொள்ளும் ஒரு முயற்சி”, என்று உதயகுமார் கூறினார்.

இந்திய ஏழைகளுடன் ஒன்றுசேர்ந்திருப்பதுபோல் காண்பித்துக்கொண்டு ஆதரவுதேட முயல்கிறார் நஜிப் என்று உதயகுமார் குற்றம் சாட்டினார்.

செயல்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை என்று கூறிய உதயகுமார் அவற்றுக்குப் பதிலாக தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்த அரசாங்கம் நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது என்றார்.

“ஜாலான் பங்சார் தமிழ்ப்பள்ளி கல்லெறியும் தூரத்தில்தான் உள்ளது.ஆனாலும் அதற்கு அரசின் முழு உதவி கிடைப்பதில்லை, பள்ளிக்கு எனத் திடல்கூட இல்லை”, என்றவர் சுட்டிக்காட்டினார்.

அந்த அமைப்பு இண்ட்ராப் தலைமையகத்துக்குப் பக்கத்தில் குடிவந்திருப்பதை மலேசியாகினி சுட்டிக்காட்டியபோது அதன் ஒருங்கிணைப்பாளர் என்.எஸ்.இராஜேந்திரனும் வியப்படைந்தார்.

“தமிழ்ப்பள்ளிகளுடன் சம்பந்தப்பட்ட குழுக்களுடன் தொடர்புகொள்ள வசதியாக இருக்குமே என்று இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்”, என்றாரவர்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான செயல்திட்டமொன்றை ஓராண்டுக்குள் உருவாக்குமாறு நஜிப் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று விளக்கிய இராஜேந்திரன், தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது எளிதல்ல என்றார்.

“எடுத்துக்காட்டுக்கு, பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு புதிதாக ஒரு இடம் கொடுக்கலாம் என்றால் அதற்கான நிலம் இல்லை.என்றாலும் அதைப் பரிசீலித்து வருகிறோம்”, என்று சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் பேராசியரான இராஜேந்திரன் தெரிவித்தார்.

இண்ட்ராபை நாடி அதன் கருத்துகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படுமா என்று வினவியதற்கு,“தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை முன்னிட்டு அவர்கள் உள்பட, எவருடனும் பேசத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

2007-இலிருந்து இண்ட்ராப் அதன் 18 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் அலுவலகத்துக்கு நிறைய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

பிரதமர் தாய்மொழிக்கல்வி உத்தரவாதம் வழங்க வேண்டும், தமிழ்ப்பள்ளிகள் முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்பது அதன் கோரிக்கைகளில் ஒன்று.

தமிழ்ப்பள்ளிகள் பாழடைந்து கிடப்பதாகவும் அவற்றுக்கு அரசு உதவி தேவை என்றும் அது வலியுறுத்துகிறது.

 

 

 

 

TAGS: