இன்னும் பதிவு செய்து கொள்ளாத மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஜுன் 30க்குள் பதிவு செய்து கொண்டால் அடுத்த பொதுத் தேர்தலில் அது ஆகஸ்ட்-க்கு பின்னர் நடைபெற்றால் வாக்களிக்க முடியும்.
ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு ஜுன் மாதமே தக்க தருணம் என இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார்.
“ஜுன் மாதம் இவ்வாண்டு இரண்டாவது கால் பகுதியின் கடைசி மாதமாகும். அதற்கு பின்னர் ஜுலை மாதம் இரண்டு வாரங்களுக்கு அது காட்சிக்கு வைக்கப்படும். ஆட்சேபம் ஏதும் இல்லை என்றால் அது ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படும்.”
அவர் புத்ராஜெயாவில் பெர்னாமாவிடம் பேசினார்.
நாட்டில் மொத்தம் 12.9 மில்லியன் பதிவு பெற்ற வாக்காளர்கள் இருப்பதாக அப்துல் அஜிஸ் கூறினார்.
அவர்களில் மலாய்க்காரர்கள் (6,782,990), சீனர்கள் (3,871,277), இந்தியர்கள் (938,946), சபா பூமிபுத்ராக்கள் (618,277), சரவாக் பூமிபுத்ராக்கள் (519,563), ஒராங் அஸ்லி மக்கள் (69,510), என்ற தகவலையும் அபதுல் அஜிஸ் வெளியிட்டார்.
பெர்னாமா