தாய்மொழிக் கொள்கையை சாடும் மகாதீரின் கருத்து முரணானது!

தாய்மொழிக் கல்வியைவிட இனவாத அரசியல்தான் நம்மை பிரித்து வைக்கிறது. இந்த பிரிவினையை ஆழமாக்கியவர் மகாதீர்தான் எனச் சாடுகிறார் கா. ஆறுமுகம்.

குவாந்தான் சீன சுயேச்சை பள்ளி சார்பாக கருத்துரைத்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தாய்மொழி கல்வி மூன்று இனங்களையும் பிரித்து வைக்கின்றன என்றும் தேசிய ஒற்றுமைக்கு தடங்களாக உள்ளதாகவும் கூறினார்.

இது சார்பாக செம்பருத்திற்கு கருத்துரைத்த சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் ஆறுமுகம், “தாய்மொழி கொள்கை என்பது மொழி-பண்பாட்டு கூறுகள் கொண்டது, தேசிய ஒற்றுமையோடு அதைப் பிணைத்து பேசுவது பழமையான கோட்பாடாகும்” என்கிறார்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரே மொழி – ஒரே பண்பாடு போன்றவைதான் ஒரு நாட்டின் ‘நேசன்-ஸ்டேட்’ அதாவது தேசிய அரசு சித்தாந்தமாக இருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மனித மேம்பாட்டிற்கான ஐக்கிய நாட்டு மன்றத்தின் 2004-ஆம் ஆண்டு அறிக்கை அந்த சிந்தாந்தத்தை நிராகரித்தது என்கிறார் ஆறுமுகம்.

“மொழி பண்பாடு கூறுகளை வளர்ச்சியடையும் சமூகங்கள் தங்களின் வாழ்வியல் அடையாளங்களாக கருதுகின்றனர். அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் போராட்டங்கள் பலத்த வேற்றுமை உணர்வுகளை உண்டாக்குகின்றன” என்கிறார்.

மேலும் விளக்கையில், ஒரே மொழி ஒரே பண்பாடு கொண்ட பல நாடுகளில் தேசிய ஒற்றுமை என்பது அவ்வளவு இயல்பாக உருவாகுவதில்லை. உதாரணமாக பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, எகிப்து, ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் ஒரே மொழி- ஒரே பண்பாடு தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவில்லை என்கிறார் ஆறுமுகம்.

தாய்மொழிக் கொள்கையை ஒருங்கிணைந்து செயலாற்ற இன்று பல நாடுகள் முன்னுதாரணமாக நிகழ்கின்றன.

சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இந்தியா, கொரியா, சீனா, மெக்கிக்கோ, ரசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தேசிய மொழியோடு பிற மொழிகளும் கற்றல் கற்பித்தலில் வட்டார நிலையில் அரசு மொழிகளாக உள்ளன.

மலேசியாவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தாய்மொழிக் கொள்கையை குறைசொல்லும் மகாதீர், முதலில் நமது நாட்டின் வேறுபாட்டை வளர்த்த உண்மையை கூறவேண்டும்.

ஒரே இனத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள், மாரா கல்லூரிகள், இராணுவம், காவல்படை போன்றவையும் இன அடிப்படையிலான அரசாங்க கொள்கைகளும் எப்படி இன ஒற்றுமையை உண்டாக்கும் என வினவுகிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

TAGS: