போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஏய்ப்பு வழக்கில் விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங் லியாங் சிக் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
எழுத்துப்பூர்வமாக தாங்கள் வழங்கிய தீர்ப்பில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதை காட்டுவதற்கு விண்ணப்பதாரர் லிங் தவறி விட்டதாக நீதிபதி அகமாடி அஸ்னாவி கூறினார்.
நான் இரண்டு தரப்பு வாதத் தொகுப்புக்களையும் நான் ஆழமாக பரிசீலித்தேன். கருத்துக்களை மிகைப்பட்டுத்தப்பட்டவை எனப் பார்க்கக் கூடாது. காரணம் விசாரணைகளின் போது அளிக்கப்பட்ட சாட்சியங்கள், கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை அமைந்துள்ளன,” என்றார் அவர்.
“இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு அந்தக் கருத்துக்கள் பாதகமாக இருக்காது. ஆகவே விண்ணப்பத்துக்குத் தகுதி இல்லை. ஆகவே அது நிராகரிக்கப்படுகின்றது,” என்றார் அவர்.
அந்த வழக்கு விசாரணை ஜுலை 13ம் தேதி மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் நீதிபதி அகமாடி ஆணையிட்டார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்னிம் அழைக்கப்படாத சூழ்நிலையில் எதிர்வாதம் செய்யுமாறு லிங்-கிற்கு நீதிபதி ஆணையிட்டதின் வழி பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக அந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் வழக்குரைஞர்கள் தங்கள் வாதத் தொகுப்பில் கூறினர்.
83 பக்கத் தீர்ப்பில் ‘கடுமையான வாசகங்கள்’ பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார் செய்த லிங்-கின் வழக்குரைஞரான வோங் கியான் கியோங், அந்தத் தீர்ப்பில் நீதிபதியின் கருத்துக்கள் வழி பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசு தரப்பை பிரதிநிதித்த டிபிபி மனோஜ் குமார், விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். வோங் குறிப்பிட்டுள்ள பத்திகளில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதான அபாயங்கள் ஏதுமில்லை என அவர் சொன்னார்.