செய்தித்தாள் ஒன்றை வெளியிடுவதற்கு வழங்கப்படும் உரிமம் ஒரு சலுகைதானே தவிர உரிமை அல்ல என்கிறது உள்துறை அமைச்சு.
இணைய செய்தித்தளமான மலேசியாகினி, கடந்த ஆண்டு பதிப்பிடும் உரிமத்துக்கான தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்று செய்துகொண்டிருந்த மனுவுக்குப் பதில் அளிக்கும் வகையில் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில் அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.
திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்ட அந்த உறுதிமொழி ஆவணத்தில் துணை அமைச்சர் அபு செமான் யூசுப், மலேசியாகினியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதானது பேச்சுரிமை ஒடுக்கப்படுவதாகப் பொருள்படாது என்றார்.
பதிப்பிடு உரிமம் என்பது ஒரு “சலுகை” என்று குறிப்பிட்ட அபு செமான், அந்த உரிமத்தைப் பேச்சுரிமையுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றார். மலேசியாகினி, அதன் செய்தித்தளத்தில் செய்திகளை வெளியிட தடை விதிக்கப்பட்டதில்லை என்றாரவர்.
மலேசியாகினி, ஒரு செய்தித்தாளை வெளியிட உரிமம் கேட்டு அமைச்சிடம் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று ஆண்டுத் தொடக்கத்தில் மனு செய்துகொண்டிருந்தது.
இம்மனு அக்டோபர் 5-இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இவ்வழக்கு உள்துறை அமைச்சரின் அதிகாரம் எந்த அளவுக்குச் செல்லும் என்பதைச் சோதிக்கும் ஓர் ஆய்வாக அமையும் என்று அச்செய்தித்தள தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.
செய்தித்தாளைப் பதிப்பிடல் என்பது அரசமைப்புவழிவரும் உரிமையாகும். மலேசியாகினியைப் பொருத்தவரை சுயேச்சையாகவும் நடுநிலையோடும் நம்பகமாகவும் செய்திகளை வெளியிட்டு வருவதாக பெயர் வாங்கியுள்ளது என்று பிரமேஷ் குறிப்பிட்டார்.
மலேசியாகினி செய்தித்தாள் வெளியிட செய்துகொண்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கடிதத்தின்வழி தெரிவித்திருந்தது. அது, ஒரு செய்தித்தாளை வெளியிடுவதற்கான மலேசியாகினியின் இரண்டாவது முயற்சியாகும். முதல் விண்ணப்பம் 2002-இல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
மலேசியாவில் செய்தித்தாள் வெளியிட வேண்டுமானால் 1984 ஆம் ஆண்டு அச்சக, வெளியீட்டக சட்டத்தின்படி உள்துறை அமைச்சிடம் உரிமம் பெற வேண்டும். அந்த உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும்.
இந்த உரிமம் வழங்கும் முறையைக் கொண்டு அரசாங்கம் தனக்குப் பிடிக்காத ஊடகங்களைத் தடை செய்யவும் வெளியீட்டாளர்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும் வசதியாக இருக்கிறது என்று அடிக்கடிக் குறைகூறப்பட்டுள்ளது.
ஆனால், இணைய ஊடகங்கள், அவ்வப்போது அதிரடிச் சோதனைகள், அச்சுறுத்தல்கள், தொல்லைகள் போன்றவற்றுக்கு இலக்கானாலும் பொதுவில் சுதந்திரமாகவே செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், இணையத்தளத்தில் தணிக்கை இல்லை என்ற மகாதிர் கால உறுதிமொழி காக்கப்படுகிறது.
நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசிய தினச் சிறப்புச் செய்தியில், செய்தித்தாள்கள் ஆண்டுதோறும் அவற்றின் உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக அவற்றுக்குக் கொடுக்கப்படும் உரிமம் இரத்து செய்யப்படும்வரை அவை செய்தித்தாளை வெளியிட்டு வரலாம்.