உத்துசானுக்கு எதிரான இன்னொரு வழக்கிலும் குவான் எங் வெற்றி

முதலமைச்சர் லிம் குவான் எங் உத்துசான் மலேசியா நாளேட்டுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார்.

லிம் புதிய பொருளாதாரக் கொள்கையை(என்இபி) ஒழித்துக்கட்டுவார் என்று அம்னோ தொடர்புடைய அந்நாளேட்டில் 2008-இல் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் தொடர்பில் அவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.

லிம்முக்கு இழப்பீடாக ரிம200,000-மும் செலவுத்தொகை ரிம20,000-மும் கொடுக்க வேண்டும் என உத்துசானுக்கு உத்தரவிடப்பட்டது.

இது,உத்துசானுக்கு எதிராக லிம்முக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வெற்றியாகும்.

2008 ஜனவரி 11-இல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த லிம், என்இபி-யை ஒழிக்கப்போவதாக தாம் சொல்லியதே இல்லை என்றார். “வேண்டியவர் என்று பாகுபாட்டுக்கும், ஊழலுக்கும், திறமைக்குறைவுக்கும்” இடமளிக்காமல் என்இபி-யைச் செயல்படுத்தப்படுத்தப் போவதாகத்தான் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அந்நாளேடு, தாம் புதிய பொருளாதாரக் கொள்கையை ஒழிக்க விரும்புவதாக அப்படியே திரித்துக்கூறி விட்டது என்றார்.

மற்றவற்றோடு அச்செய்தி அறிக்கை, தம்மை “பொறுப்பற்ற, தகுதியற்ற” தலைவர் என்றும் காண்பிக்க முற்பட்டதாகவும் லிம் கூறினார்.

அதே ஆண்டு மார்ச் 13, 14-இல் என்இபி-யை ஒழித்துக்கட்டும் எண்ணம் தமக்கு இல்லை என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியபோதும் எதிரி தொடர்ந்து தம் பெயரைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாக லிம் சொன்னார்.

அச்செய்தியின் விளைவாக லிம்முக்கு எதிராக, மார்ச் 14-இல், கொம்டாருக்கு வெளியில் பெரிய ஆர்ப்பட்டம் ஒன்று நடந்தது.அதில், அம்னோ தலைவர்கள் பலர் உள்பட ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

TAGS: