பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.விடுதலை செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவ்விருவரும் வியாழக்கிழமை இரண்டாம் தடவையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.பேராக், கமுந்திங் தடுப்புமுகாமில் உள்ள கைதிகள் இருவர்தான் இப்படி உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியிருப்பவர்கள்.
மலேசியர்களான அவ்விரு கைதிகளும் மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யும்வரை காத்திருக்க விரும்பவில்லை என சுதந்திரத்துக்குப் போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பின் பேச்சாளர் பாடியா நட்வா பிக்ரி கூறினார்.
“ரசாலியையும் முகம்மட் பாட்சுல்லா அப்துல் ரசாக்கையும் இன்று பார்த்தோம்.அவ்விருவரும் இம்மாத இறுதிவரை காத்திருக்கத் தயாராக இல்லை”, என்றவர் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அம்முகாமில் உள்ள மற்ற தடுப்புக்கைதிகள் சுஹாகாம் நல்லதொரு பதிலுடன் வரும் எனக் காத்திருக்கிறார்கள்.ஜூன் 30ஆம் நாள்வரை அவர்கள் அவகாசம் அளித்துள்ளனர்.அதன் பின்னர் அவர்களும் உண்ணாவிரதம் இருப்போருடன் சேர்ந்துகொள்வார்கள்.
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்ட வேண்டும்.இரண்டில் ஒன்றைச் செய்ய உள்துறை அமைச்சுக்கு ஒரு மாதம் அவகாசம் அளிப்பதாக சுஹாகாம் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் இம்மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
அம்முகாமில், 20 மலேசியர்களும்25 வெளிநாட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.டாருல் இஸ்லாம் இயக்கத்தில் ஈடுபட்டதற்காகவும் ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களைப் புரிந்ததற்காகவும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஐஎஸ்ஏ ஏப்ரல் மாதம் இரத்துச் செய்யப்பட்டு அதனிடத்தில் பாதுகாப்புக் குற்றச் சட்டம்2012 கொண்டுவரப்பட்டிருந்தாலும்கூட தடுப்புக் கைதிகளில் சிலர் 2014-வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது.
புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் ஏற்கெனவே ஐஎஸ்ஏ-இன்கீழ் விடுக்கப்பட்ட உத்தரவுகளை எந்த வகையிலும் பாதிக்காது.உள்துறை அமைச்சர் மட்டுமே அந்த உத்தரவுகளை மீட்டுக்கொள்ள முடியும்.
ஐஎஸ்ஏ இரத்தானதை அடுத்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 12பேர் கடந்த மாதமே உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.சுஹாகாம் அதிகாரிகள் முகாமுக்கு வருகை புரிந்ததை அடுத்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.