கையூட்டுக் கொடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டும் நிறுவனங்களின் பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதென்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் முடிவை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) வரவேற்கிறது.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை டிஐ-எம் தலைவர் பால் லோ நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.
ஊழல்கள்மீதான பன்னாட்டுச் சட்டங்கள், பெரும் அபராதம் விதித்தல், கடுமையான சிறைத்தண்டனை, பணியாளர்களின் செயல்களுக்கு நிறுவனங்களைப் பொறுப்பேற்க வைத்தல் போன்றவற்றால் தனியார்துறை ஊழலைத் தடுக்க முனைவதாக லோ கூறினார்.
“அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப நடப்புச் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று டிஐ-எம் கேட்டுக்கொள்கிறது.
“ஊழலுக்காக ஊழியர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்போது அந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள்மீதும் வழக்கு தொடுக்க வேண்டும்”, என்று லோ குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனலின் ஊழல் பட்டியலில் மலேசியா 60வது இடத்தைப் பெற்றிருந்தது.இது,கடந்த பத்தாண்டுகளில் மலேசியாவுக்குக் கிடைத்துள்ள மிக மோசமான மதிபீடு என்கிறது டிஐ-எம்.