எம்பி-க்கு விலைபேசும் வீடியோமீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க ஜிங்கா13 வலியுறுத்து

மாற்றரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ கையூட்டுக் கொடுக்கும் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அதன்மீது நடவடிக்கை எடுக்காதிருப்பதை பிகேஆர் தொடர்புள்ள ஊழல் கண்காணிப்பு அமைப்பான ஜிங்கா 13 கண்டித்துள்ளது.

ஷா ஆலம் பாஸ் எம்பி காலிட் சமட் “வெறுக்கத்தக்க ஒரு செயலைக்” காண்பிக்கும் வீடியோ ஒன்றைக் காட்சிக்கு வைத்துள்ளார்.அது மாற்றரசுக் கட்சியின் எம்பி-களைக் கட்சிதாவ வைப்பதற்கு “கொடிய சதி” நடப்பதற்குத் தக்க சான்றாகும் என்று ஜிங்கா 13-இன் செயலாளர் டி.கே.விக்கி ஓர் அறிக்கையில் கூறினார்.

“பண அரசியலை அல்லது எம்பிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதை அல்லது அம்னோ ஆள் ஒருவர் அசிங்கமான செயலில் ஈடுபடுவதை விசாரிக்க வேண்டும் என்கிறபோது எம்ஏசிசி குருடாகவும் செவிடாகவும் ஊமையாகவும் மாறிவிடுகிறது.இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிக்கிறது”, என்றாரவர்.

ஆணையம் அந்த விவகாரத்தைப் பாகுபாடின்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜிங்கா13 சம்பந்தப்பட்ட அம்னோ ஆளைக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஜூன் 7-இல்,காலிட்,  எம்பிகளை விலைக்கு வாங்க பேரம் பேசப்படுவதைக் காண்பிக்கும் வீடியோ ஒன்றைச் செய்தியாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தார்.

பின்னர் ஒரு நாளில் அவரே இன்னொரு வீடியோவையும் வெளியில் கொண்டு வந்தார்.அது, முன்னாள் பிகேஆர் உறுப்பினர் என்று கூறப்படும் ஜமில் இப்ராகிம் 31பிகேஆர் எம்பிகளைப் பட்டியல் போட்டு அவர்களைக் கட்சிதாவ வைக்கும் நோக்கத்துடன் அணுகப்போவதாகக் கூறுவதைக் காண்பித்தது.

ஜமில், தாம் அம்னோ ஆள் என்று கூறப்படுவதை மறுத்தார்.ஆனால், பிகேஆரை ஒழிப்பதுதான் தம் இலட்சியம் என்றார்.

TAGS: