பெர்சே ஒட்டக்காரர்கள் டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ‘ஊடுருவினர்’

இன்று டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் செல்லும் எல்லா சாலைகளிலும் தடுப்புக்கள் போடப்பட்டிருந்தன. காரணம் இன்னொரு பெர்சே பேரணி அல்ல.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சதுக்கம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கேஎல் நெடுந்தூர ஒட்டத்துக்கு இறுதிக் கோடாக பயன்படுத்தப்பட்டதே அதற்குக் காரணமாகும்.

இருந்தாலும் அந்த நிகழ்வு பெர்சே ஆதரவாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் அதனை டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் செல்வதற்கு சட்டப்பூர்வ காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

ஏப்ரல் 28ம் தேதி அந்த இடத்தைச் சுற்றிலும் 100,000 பெர்சே ஆதரவாளர்கள் கூடினர். ஆனால் கண்ணீர் புகைக் குண்டுகளும் இரசாயனம் கலந்த நீரும் பாய்ச்சப்பட்டதால் அவர்கள் பின்னுக்குச் செல்ல நேரிட்டது.

இந்த முறை பெர்சே ஆதரவாளர்கள் “நான் பெர்சே 2.0க்காக ஒடுகிறேன்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த மஞ்சள் நிறத் துண்டுகளை அணிந்து கொண்டு சதுக்கத்திற்குள் நுழைந்தனர்.

‘Let’s Bersih the Marathon Kuala Lumpur 2012 ‘என அழைக்கப்பட்ட அந்த நிகழ்வுக்கான யோசனை சமூக ஊடகமான முகநூலில் உள்ள பயனாளிகள் வழியாக தெரிவிக்கப்பட்டது.

“நாங்கள் ஏப்ரல் 28ம் தேதி டாத்தாரனுக்குள் நுழைய முடியவில்லை. ஆனால் மலேசியாவின் மிகப் பெரிய நெடுந்தூர ஒட்டத்தில் நாங்கள் அதனைச் செய்ய முடியும்,” என முக நூலில் அந்த நிகழ்வு பற்றிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.”

மொத்தம் 500 துண்டுகளுக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜுலி வோங் கூறினார்.

பெர்சே-யை ஆதரித்த ஒட்டக்காரர்கள் குழு ஒன்று அந்த யோசனைக்கு வடிவம் கொடுத்தது. அந்த இயக்கத்தின் சின்னத்துடன் ஒடவும் அது விரும்பியது என்றார் வோங்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கேஎல் நெடுந்தூர ஒட்டம் காலை மணி 4.00 வாக்கில் தொடங்கியது. அதில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், இளைஞர் விளையாட்டு அமைச்சர் அகமட் சாப்ரி சிக், கோலாலம்பூர் மேயர் அகமட் புவாட் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பரிசுகளை வழங்கிய போது அவர்கள் பெர்சே ஒட்டக்காரர்கள் யாரையும் எதிர்கொண்டனரா என்பது தெரியவில்லை.