பிகேஆர் கட்சியின் காலித் இப்ராஹிம் வழி நடத்தும் சிலாங்கூர் நிர்வாகத்துடன் தொடர்புடைய இரண்டு அண்மையப் பிரச்னைகள் சாதாரணமானவை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
சிலாங்கூர் அரசாங்கப் பதவி ஒன்றிலிருந்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் திடீரென விலகிக் கொண்டதும் காலித்-தின் அரசியல் செயலாளர் பரிந்துரைக் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டதும் அரசியல் நெருக்கடிகள் எனத் தாம் எண்ணவில்லை என்றார் அவர்.
ராபிஸி கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த விரும்பியதால் மாநில அரசாங்கப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு முதல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக ராபிஸி கூறி வந்துள்ளார். ஆகவே அவர் ராஜினாமா செய்ததை சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருத வேண்டிய அவசியமே இல்லை,” என அவர் குறிப்பிட்டார்.
நிலமையை விளக்குவதற்கு ராபிஸி இன்று ஒர் அறிக்கை வெளியிடுவார் என்றும் அந்த பிகேஆர் மூத்த தலைவர் தெரிவித்தார்.
“அவர் இப்போது கட்சியில் முழு நேரப் பணியில் ஈடுபட்டுள்ளார். தாம் மாநில அரசில் வேலை செய்ய வேண்டும் என அவர் எண்ணவே இல்லை. கடந்த ஆண்டு முதல் ராபிஸி விலகுவது பற்றி சிந்தித்து வந்துள்ளார்,” என அன்வார் நேற்று பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
பக்காத்தான் ராக்யாட் நிர்வாகம் செய்யும் மாநிலங்களில் ஏற்படும் பிரச்னைகளை அம்னோ தொடர்புள்ள ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. எல்லா விஷயங்களும் “திடீரென பெரிய அரசியல் விவகாரங்களாகி விடுகின்றன என்றார் அவர்.
அன்வார் பாக்கா விஷயத்தை பரிசீலித்து வருகிறார்
காலித்-தின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசின், சட்ட நிறுவனம் ஒன்று, சிலாங்கூர் அரசுடன் தொடர்புடைய நிறுவனம் ஆகிய தரப்புக்களுக்கு இடையில் நிகழ்ந்துள்ள கடிதத் தொடர்புகள் பற்றியும் அன்வாரிடம் வினவப்பட்டது.
காலித் அதனை வழக்கமான நடவடிக்கையாகக் கருதுகிறார். அது நெறிமுறைகளை மீறவில்லை என்றும் அவர் சொன்னார். பாக்கா-வின் கடிதம் பரிசீலினைக்காக Permodalan Negeri Selangor Bhdக்கு அனுப்பப்பட்டது.
“அடுத்த நடவடிக்கை அந்த அரசு நிறுவனத்தைப் பொறுத்ததாகும் அது அதனை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது நிராகரிக்கலாம்,” என்றார் காலித்.
ஆனால் பரிந்துரைக் கடிதங்கள் ஏதும் எழுதப்படக் கூடாது என காலித் உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
அந்த விவகாரம் மீதான பாக்காவின் விளக்கத்தைத் தாம் இன்னும் பார்க்கவில்லை எனக் குறிப்பிட்ட அன்வார், நிச்சயம் அதனைப் படிக்கப் போவதாகச் சொன்னார்.
“அந்த ‘சர்ச்சை’ சிலாங்கூரில் பிகேஆர் தலைமையிலான நிர்வாகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தாதா என வினவப்பட்ட போது அன்வார் “ஒரே ஒரு பரிந்துரைக் கடிதம், அது மாநில நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?” என வினவினார்.
“அம்னோ தலைவர் ஒருவருடன் தொடர்புடையவர்களால் இழக்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் இழப்புக்கள் ( தேசிய விலங்குக் கூட நிறுவனம் ) பற்றி என்ன சொல்வது ? அவை முக்கியமான விஷயங்கள் இல்லையா ?” என அவர் மேலும் வினவினார்.
“ஒரே ஒரு பரிந்துரைக் கடிதம். அது பெரிய அரசியல் நெருக்கடியாகி விடுகிறது !”