மகளிர் அமைச்சை எடுத்துக்கொண்டது ஏன்?-நஜிப் விளக்கம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு ஒரு பெண்மணியை அமைச்சராக நியமிக்காமல் தாமே அப்பொறுப்பை ஏற்றதைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

“இது தற்காலிகமானதுதான். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் மகளிர் ஒருவரை அமைச்சராக நியமிப்போம்”, என்று மக்கள் அவையில் கேள்விநேரத்தின்போது பிரதமர் கூறினார்.

அமைச்சர் யார் என்பதைவிட அமைச்சின் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்படுவதும் அவற்றால் மகளிர் நிலை மேம்படுவதும்தான் முக்கியம் என்றாரவர்.

நஜிப், அம்பாங் பிகேஆர் எம்பி சுரைடா கேட்ட துணைக் கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.முடிவு செய்யும் பொறுப்பான பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு இருக்க வேண்டும் என்ற கொள்கை இருக்கும்போது அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் பொறுப்பில் ஓர் ஆடவர் இருப்பது ஏன் என்று அவர் கேட்டிருந்தார்.

“ அந்த அமைச்சில் ஒரு பெண்ணை வைப்பதற்குக்கூட உங்களால் முடியவில்லை.அதற்குத் தகுதிபடைத்த பெண்கள் பலர் உள்ளனர்.உங்கள் செயல் மகளிரைக் கேலி செய்வதாக உள்ளது”, என்று சுரைடா காட்டமாகக் கூறினார்.

மகளிர்.குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில், அவரின் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சொந்தமான நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு வழங்கப்பட்ட ரிம250மில்லியன் கடன் விவகாரம் தொடர்பில் பதவி விலகியதைத் தொடர்ந்து நஜிப் அந்த அமைச்சின் பொறுப்பை ஏற்றார்.

பிரதமராகவும் நிதி அமைச்சராகவுமுள்ள நஜிப்புக்கு வேலைப்பளு அதிகம் என்பதால் மகளிர் அமைச்சின் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற முடியாது என சுரைடா வாதாடினார்.மகளிர் மேம்பாடு தொடர்பில் பல விசயங்கள் தீர்வு காணப்படாமல் கிடக்கின்றன என்று அவர் சொன்னார்.

 ‘மகளிர் நம்பிக்கை’ 

நஜிப்பை மகளிரின் நம்பிக்கை என்று வருணித்த ஹலிமா சடிக்(பிஎன் -தெங்காரா), ஊராட்சி மன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்.

அதற்குப் பதிலளித்த நஜிப், ஊராட்சி மன்றங்களில் மகளிர் எண்ணிக்கையை உயர்த்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

ஆனால், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் அவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

TAGS: