அம்பிகா: தேர்தல் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்

வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெயர் குறிப்பிட்டுள்ளதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வரவேற்றுள்ளார்.

என்றாலும் அந்த அமைப்புக்கள் மீது ‘தேவையில்லாத கட்டுப்பாடுகள்’ விதிக்கப்படுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

அந்த அரசு சாரா அமைப்புக்கள் தேர்தல் கண்காணிப்பில் அனுபவத்தை பெற்றிருக்க மாட்டா என கவலை தெரிவித்த அம்பிகா அதற்காக அவற்றுக்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

“அதன் வழி அவை தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் போதுமான ஆற்றலைப் பெற முடியும்,” என அவர் இன்று பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

அம்பிகா, தூய்மையான ஆளுமைக்கான ஆசியான் கூட்டணி என்னும் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

“விரைவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பொருத்தமான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பார்வையாளர்களாக மட்டும் இருப்பது போதாது என்பதால் அவர்கள் விரைவில் தங்கள் பணிகளையும் தொடங்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

அந்த ஐந்து அரசு சாரா அமைப்புக்களும் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என இசி கூறியுள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்பதும் ஒன்றாகும்.

Ideas என்ற ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம், சுயேச்சையான கருத்துக் கணிப்பு மய்யமான மெர்தேக்கா மய்யம், Asli என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம், TI-M என்ற அனைத்துலக மலேசிய வெளிப்படைக் கழகம், Proham என்ற மனித உரிமை மேம்பாட்டுக்கான சங்கம் ஆகியவையே அந்த ஐந்து அமைப்புக்களாகும்.

Ideasம் Asliயும் தனியார் சிந்தனைக் களஞ்சியங்களாகும். Proham மனித உரிமைப் போராட்ட அமைப்பாகும். அதில் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அவை கட்சிச் சார்பற்ற தொழில் ரீதியிலான அமைப்புக்கள் என்பதால் அவை தெரிவு செய்யப்பட்டதாக இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொன்னார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு சுயேச்சையான கண்காணிப்பாளர்களை அழைக்கவும் இசி திட்டமிட்டுள்ளதையும் பெர்சே வரவேற்பதாக அம்பிகா தெரிவித்தார். அந்தத் தகவல் ‘நிச்சயமாக்கப்பட” வேண்டும் என்றார் அவர்.

 

TAGS: