தேர்தல்களைக் கண்காணிப்பதில் அனுபவம் வாய்ந்த மலேசியாவின் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பு(மேஃப்ரல்), தேர்தல் ஆணையம் அனுபவமற்ற என்ஜிஓ-கள் சிலவற்றைப் பார்வையாளர்களாக அமர்த்திக்கொண்டு தன்னிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறது.
13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐந்து என்ஜிஓ-களுக்கும் தேர்தலைக் கண்காணிப்பதில் நிபுணத்துவமோ அனுபவமோ கிடையாது என்று மேஃப்ரல் தலைவர் சைட் இப்ராகிம் சைட் நோ குறிப்பிட்டார்.
“அதனால்தான் இசி, எங்களை ஒதுக்கிவிட்டு அவற்றை நியமனம் செய்துள்ளதுபோலும்”, என்று சைட் இப்ராகிம் கூறினார்.முன்பு, பல இடைத்தேர்தல்களில் மேஃப்ரலை தேர்தல் கண்காணிப்பாளராக இசி அமர்த்தியது உண்டு. பல நாடுகளுக்குச் சென்று தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவமும் அந்த அமைப்புக்கு உண்டு.
13வது பொதுத் தேர்தலின் கண்காணிப்பாளர்களாக நியமனம் பெற்றுள்ள ஐந்து என்ஜிஓ-கள்,ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்),ஜனநாயக மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கழகம்(ஐடியாஸ்),சுயேச்சை கருத்துக்கணிப்பு மையமான மெர்டேகா மையம், சிந்தனைக் குழுவான ஆசிய வியூக மற்றும் தலைமைத்துவக் கழகம்,மனித உரிமைகளை கண்காணிக்கும் மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம்(ப்ரோஹாம்) ஆகியவையாகும்.
நியமனம் பெற்றுள்ள என்ஜிஓ-கள் இசி-யின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட சைட் இப்ராகிம்,ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக செயல்படுவதுபோன்ற தோற்றத்தை அது உருவாக்க முயல்கிறது என்றார்.
மேஃப்ரல் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது என்பதாலும் மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதாலும் அதைத் தேர்தல் கண்காணிப்பாளராக சேர்த்துக்கொள்ளவில்லை என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்தாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியிருந்தது.
இதைப் பற்றிக் கருத்துரைத்த சைட் இப்ராகிம், “ அரசியல் சார்பு எல்லாருக்குமே இருக்கலாம்.அதற்காக, நாங்கள் அனைத்துலக தரத்துக்கு ஏற்ப கண்காப்புப் பணியை முறையாக செய்வதில்லை என்று ஆகிவிடாது”, என்றார்.
அனைத்துலக நடைமுறைகளுக்கு முரணானவை
தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்வதில் நியாயமாக நடந்துகொள்வதாக இருந்தால், இசி என்ஜிஓ-களுக்கு நிபந்தனைகளைப் போட்டிருக்கக் கூடாது என்று சைட் இப்ராகிம் வலியுறுத்தினார்.
“நிபந்தனைகள் அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப இல்லை.அனைத்துலக நடைமுறை என்பது அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவும் அறிக்கைகளைச் சுயமாக வெளியிடவும் உரிமை வழங்குவதாகும்.தேர்தல் முழுக்க அவற்றுக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவைப்பதல்ல”.
கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் அமைப்புகள் ஊடகங்களிடம் பேச அனுமதிக்கப்படாது என்று அப்துல் அசீஸ் கூறியுள்ளார்.
அந்த என்ஜிஓ-களின் அறிக்கைகளை வெளியிடுமுன்னர் இசி அவற்றைத் தணிக்கை செய்யும் என்றும் தெரிகிறது.
கண்காணிப்பாளராக பணியாற்ற அழைக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தேசிய ஜனநாயக மற்றும் வாக்காளர் நெறிக் கழகம்(NIEI).அதனிடம் தேர்தல்களைக் கண்காணிக்கும் நிபுணத்துவம் உண்டு;அனைத்துலக அளவில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. ஆனால், அது கண்காணிப்பாளராக பணியாற்ற மறுத்துவிட்டது.
தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது அதற்குப் பிடிக்கவில்லை.