அண்மையில் பேரணிக்கு ஏற்பாடு செய்ததற்காக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தூக்கிலிட வேண்டும் என்று கூறிய ஸ்ரீ காடிங் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் அசீசுக்கு எதிராக டிஏபி எம்பிகள் போலீசில் புகார் செய்வார்கள்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில், செய்தியாளர் கூட்டமொன்றில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இதனைத் தெரிவித்தார்.
நேற்று துணை விநியோக சட்டமுன்வரைவு மீது குழுநிலையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட முகம்மட், அம்பிகாவை (வலம்) “தேசத் துரோகி” என்று குறிப்பிட்டு பேரணியை ஏற்பாடு செய்த “துரோகச் செயலுக்காக” அவரைத் தூக்கிலிட வேண்டும் என்றும் கூறினார்.
“ஸ்ரீகாடிங் எம்பியின் பேச்சு கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அப்பேச்சு நிந்தனைக்குரியது, இனவாதம் மிக்கது,மிரட்டும் தோரணையைக் கொண்டிருக்கிறது.அது ஓர் இந்தியரை அதுவும் ஒரு ஹிந்துவை நோக்கிச் சொல்லப்பட்டது என்பதால் அதை இனவாதம் மிக்கதாக நினைக்கிறோம்.
“முகம்மட் தாம் சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி நேரத்தை விரயமாக்கப் போவதில்லை”, என்று லிம் குறிப்பிட்டார்.
பெர்சே ஏற்பாட்டுக்குழுவில் இருந்த இணைத் தலைவர் சமட் சைட் உள்பட மற்றவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அம்பிகாவை மட்டும் குறிவைத்துப் பேசிய முகமட்டின் பேச்சு “இனவாத” மிக்க ஒன்றுதான் என்று லிம் வலியுறுத்தினார்