இசா சட்டம் அகற்றப்படுதல்: அது ஒரு அடையாள மாற்றம்தான், இசா ஆதரவாளர்கள்

இசா சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட விருப்பது இசா சட்டத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று இசா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மகாரான் (magaran) என்ற அரசு சார்பற்ற அமைப்பு பிரதமர் நஜிப் நேற்று அறிவித்தவாறு இசா சட்டத்தை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டம் ஒரு பொருளின் அடையாளக் குறியை மாற்றும் நடவடிக்கையின் ஓர் அங்கமே தவிர “அப்பொருளைச் சந்தையிலிருந்து அகற்றுவதல்ல” என்று கூறியுள்ளது.

“இசா சட்டத்தை அகற்றுவது ஜிஎம்ஐக்கு (இசா எதிர்ப்பு அமைப்பு) கிடைத்த வெற்றியல்ல. பின்னர் அறிவிக்கப்பட விருக்கும் புதிய சட்டங்களுக்கு ஏற்பட செயல்பட ஜிஎம்ஐ கூட அடையாளக் குறி மாற்றம் செய்ய வேண்டி வரும் என்று மாகாரான் அமைப்பின் சட்ட ஆலோசகர் முகமட் கைருல் அஸ்சாம் அப்துல் அசிஸ் மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று, இசா சட்டம் அகற்றப்படும் என்றும் அதன் இடத்தில் இரண்டு புதிய சட்டங்கள் இடம் பெறும் என்று பிரதமர் நஜிப் அறிவித்தார்.

நஜிப்பின் அறிவிப்பு மக்கள் நலன்கள் காக்கப்படும் என்ற அரசியல் நோக்கம் கொண்ட ஒன்றாகும் என்று வர்ணித்த கைருல், புதிய சட்டம் அமெரிக்காவில் 9/11 இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குத்தலுக்குப் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றம் அக்டோபர் 2001 இல் இயற்றிய பேட்ரியட் சட்டத்தின் (Patriot Act)அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் என்று கருதப்படும் எந்த இலக்கையும், அந்த இலக்கு வெளிநாட்டில் இருந்தாலும் கூட, தாக்குவதற்கு பேட்ரியட் சட்டம் அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றாரவர்.

“அமெரிக்க பேட்ரியட் சட்டத்தைப் பின்பற்றுவது நல்லதாகும். மருட்டல் இருக்கிறது என்று கருதப்பட்டால் தடுப்பு நடவடிக்கை எடுக்க அது அனுமதிக்கிறது”, என்று கைருல் கூறினார்.

TAGS: