தேர்தல் பார்வையாளர்கள் தேர்வு ‘தன்மூப்பானது’ என அபிம் வருணனை

இசி என்ற தேர்தல் ஆணையம் ‘தன்மூப்பாக’ தேர்தல் பார்வையாளர்களைத் தேர்வு செய்துள்ளது என  அபிம் எனப்படும் Angkatan Belia Islam Malaysia அதிருப்தி தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களாக பணியாற்று அதற்கு இசி அங்கீகாரம் அளித்துள்ள ஐந்து அமைப்புக்களுக்கு தேர்தல் கண்காணிப்பில் நிறைவான அனுபவம் இருப்பதாக தெரியவில்லை என அபிம் தலைவர் அமிடி அப்துல் மனான், மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“எந்த அடிப்படையில்  அந்த அரசு சாரா அமைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டன ? அனுபவமா, தொடர்புகளா அல்லது கௌரவமா ?” என அமிடி வினவினார். “வெளிப்படைத் தன்மையைக் கருத்தில் கொண்டு இசி அந்த ஐந்து அரசு சாரா அமைப்புக்களை நியமிக்க தான் பயன்படுத்திய காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும்.”

Ideas என்ற ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம், சுயேச்சையான கருத்துக் கணிப்பு மய்யமான மெர்தேக்கா மய்யம், Asli என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம், TI-M என்ற அனைத்துலக மலேசிய வெளிப்படைக் கழகம், Proham என்ற மனித உரிமை மேம்பாட்டுக்கான சங்கம் ஆகியவையே இசி அறிவித்த ஐந்து அமைப்புக்களாகும்.

தேர்தல் பார்வையாளராக செயல்படுவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் அபிம் விண்ணப்பித்துக் கொண்டதாக அமிடி தெரிவித்தார். ஆனால் இது வரை இசி இன்னும் பதில் அளிக்கவில்லை.

இசி தேர்வு செய்த ஐந்து அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல்களைப் பார்வையிடுவதில் அபிம் ஒரளவு அனுபவத்தைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

அது 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலை Mafrel என்ற சுதந்திரமான,நியாயமான தேர்தல்களுக்கான மலேசியர்கள் அமைப்புடன் இணைந்து கண்காணித்துள்ளது.

“நாங்கள் பெர்சே போராட்டத்தில் இணைந்துள்ளோம். மலேசியாவில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு  நாங்கள் பங்காற்ற விரும்புகிறோம்,” என தேர்தல் பார்வையாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற தமது அமைப்பு ஏன் விரும்புகிறது என்பதை விளக்கிய போது அமிடி சொன்னார்.

நிபந்தனைகளை விதிக்கும் இசி குறை கூறப்பட்டது

அங்கீக்காரம் வழங்கப்பட்டுள்ள பார்வையாளர்களுக்கு இசி விதித்துள்ள நிபந்தனைகளையும் அமிடி குறைகூறினார். தேர்தல் பிரச்சார காலத்தின் போது ஊடகங்களிடம் அவை பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும்.

“அந்த நிபந்தனைகள் அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப இல்லை,” என்றார் அவர்.

அத்துடன் அந்த அமைப்புக்களின் அறிக்கைகள் பொது மக்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்னர் இசி அவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை எனத் தெரிய வருகின்றது.

அபிம் தேர்தல் பார்வையாளராக அங்கீகாரம் பெறவில்லை என்றாலும் தனது விரிவான கீழ் நிலை கட்டமைப்பைக் கொண்டு புள்ளிவிவரங்களைச் சேர்ப்பதற்கு அந்த ஐந்து அமைப்புக்களுக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் அமிடி சொன்னார்.

தேர்தல் முறைகேடுகளை கண்டு பிடிப்பதில் தேர்தல் தொண்டர்களுக்கு அபிம் பயிற்சி அளிக்கும்.

தேர்தல் பார்வையாளர்களாக அங்கீகாரம் பெறாத அபிம் மட்டும் ஒன்றல்ல. Mafrel அமைப்பையும் இசி புறக்கணித்துள்ளது. ஐந்து தேர்தல் பார்வையாளர்களை இசி தேர்வு செய்த முறையை அதுவும் கண்டித்துள்ளது.

வெளிப்படைத் தன்மை என்ற மாயையை ஏற்படுத்தும் பொருட்டு போதுமான அனுபவம் இல்லாத அமைப்புக்களை இசி தேர்வு செய்துள்ளதாக Mafrel-ம் நேற்று குறை கூறியது.

TAGS: