நஜிப்பின் நிர்வாகத்தில் ஊழல் மண்டிக்கிடக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசை அவரின் தந்தையார் காலஞ்சென்ற அப்துல் ரசாக்கின் 1970-ஆம் ஆண்டு அரசுடன் ஒப்பிட்டால் ஊழல் மண்டிக்கிடப்பது போலத் தோன்றுகிறது.

நான்காவது பிரதமரான டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் தோன்றிய ஊழல், அதற்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அம்னோ தலைவர்களிடயே செழித்து வளர்ந்து ஒரு கலாச்சாரமாக பரவிக்கிடப்பதாக சர்ச்சைக்குரிய எழுத்தாளர் காசிம் அஹ்மட் குறிப்பிட்டார்.

“நிறைய பேர் அதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்போல் தெரிகிறது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை தலைவர்களும் போய்விடுவார்கள். அதனால்தான் (நஜிப்) கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்போலும். இதுதான் பெரிய பிரச்னை”, என்று அந்த முன்னாள் இடச்சாரித் தலைவர் கூறினார். 1986-இலிருந்து 1995வரை அம்னோ உறுப்பினராகவும் இருந்துள்ளார் காசிம் அஹ்மட்.

அடிக்கடி அடித்தட்டு மக்களைச் சந்திப்பது நஜிப்பின் பலம். ஆனால், அவரது நிர்வாகம் “கனத்துப்போய்க் கிடக்கிறது”, அதில் செயல் திறனும் குறைவு என்று கூலிமில் அவரது வீட்டில் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் காசிம் அஹ்மட் கூறினார்.

“அரசுப் பணியில் 1.4மில்லியன் பணியாளர்கள்.அத்தனை பெரிய எண்ணிக்கை தேவை என்று நான் நினைக்கவில்லை”, என்று குறிப்பிட்டவர் அதில் 25விழுக்காட்டினரை விவசாயம் போன்ற துறைகளுக்குத் திருப்பி விடலாம் என்றார்.

பொதுச் சேவை கனத்துப் போய்க்கிடக்கிறது

“அரசாங்க அலுவலகங்கள் உயர்நிலையில் உப்பிப் போயிருக்கின்றன.ஒரு இயக்குனர் இருப்பார், துணை இயக்குனர் இருப்பார்,பிறகு பெங்காரா கானான்(மூத்த இயக்குனர்) பெங்காரா கீரி என்றெல்லாம் இருப்பார்கள்.அது கனத்துப் போய்க்கிடக்கிறது.அதைக் குறைத்து விரயத்தையும் குறைக்கலாம்”, என்றார்.

நஜிப்மீதும் அவரின் குடும்பத்தார்மீதும் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி வினவியதற்கு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது கூறப்படும் “அவதூறுகளுக்கு”ப் பதிலடியாக அவ்வாறு செய்யப்படுவதாக காசிம் நினைக்கிறார்.ஆனால், மாற்றரசுக் கட்சியின் தாக்குதல்கள் வெற்றிபெறவில்லை என்பது அவரின் கருத்து.

“அல்டான்துயா விவகாரத்தைப் பாருங்கள்.அதன் தொடர்பில் நஜிப், நீண்ட காலத்துக்கு முன்பே பள்ளிவாசலில் சத்தியம் செய்து விட்டார்”.

2020-க்குள் மலேசியாவை உயர் வருமானம் பெறும் நாடாக மாற்றுவது உள்பட பல்வேறு உருமாற்றத் திட்டங்கள், கிராம மேம்பாட்டை ஒருங்கிணைத்தல், மிதவாத இயக்கங்களை முன்னெடுத்துச் செல்லுதல் போன்றவை நஜிப்பின் பலம் என்று காசிம் கருதுகிறார்.

பல பலவீனங்கள் இருந்தாலும் வரும் பொதுத் தேர்தலில் அம்னோவும் பிஎன்னும் தோல்வி காண்பது சாத்தியமில்லை என்றாரவர்.ஏனென்றால் அதைத் தோற்கடிக்கும் வலிமை மாற்றரசுக் கட்சிக்கு இல்லை.

“ஏற்கனவே பிஎன் சில மாநிலங்களில் தோற்றுப்போனது. கிளந்தானில் நீண்ட காலமாகவே தோல்விதான்.ஆனால், அங்கு பாஸ் என்ன செய்துள்ளது?மலாய்க்காரர்கள் சமய அறிஞர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது”, என்றார்.

மாற்றரசுக்கட்சியில் அஹ்மட் போஸ்தமம்(Ahmad Boestamam)போன்ற பெருந் தலைவர் ஒருவர் இருந்தால் அவர்களின் நோக்கம் நிறைவேறும் சாத்தியம் உண்டு.

அப்துல் ரசாக்கை நினைவுகூர்ந்த காசிம், ஊழலைத் தடுத்ததுடன் பல சீர்திருத்தக் கொள்கைகளை அறிமுகப்படுத்திய அந்த “மேம்பாட்டுத் தந்தை”யே மலேசியாவின் தலைசிறந்த பிரதமராவார் என்றார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த காசிம், மலேசியாவுக்குத் திரும்பி வரவும் விடுதலைப் போராளி அஹ்மட் போஸ்தமாமிடமிருந்து பார்டி சோசியலிஸ் ரக்யாட் மலேசியா(பிஎஸ்ஆர்எம்)வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கும் காரணமாக இருந்தவர் துங்கு அப்துல் ரஹ்மான்.

“துங்குமீது எனக்கிருந்த ஆத்திரத்தால்தான் திரும்பி வந்தேன்.போஸ்தமாமிடமிருந்து பிஎஸ்ஆர்எம் பொறுப்பையும் ஏற்றேன்”, என்றார்.

அவருடைய ஆத்திரம், அப்துல் ரசாக் பிஎஸ்ஆர்எம்மையும் பிஎன்னில் சேர்த்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டதால் விரைவில் தணிந்தது.

ஆனால், பிஎஸ்ஆர்எம்மை பிஎன்னில் இணைக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை.

“அவப்பேறாக, துன் அப்துல் ரசாக் லிக்குமியா நோய்கண்டு லண்டனில் திடீரென்று இறந்து போனார். அந்தச் செய்தியைக் கேட்டதும் கண்கள் தாமாகவே கண்ணீரைக் கொட்டின”, என்று காசிம் Mencari Jalan Pulang (வீடு நோக்கிப் பயணம்) என்ற நூலில் அந்த நினைவைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

மேலும் இரு முன்னாள் பிரதமர்கள் பற்றிக் கருத்துரைத்த காசிம், டாக்டர் மகாதிரைப் பற்றி நிறைய குறை சொல்லப்பட்டாலும் அவரது தலைமைத்துவத்தில் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் என்று கருதுகிறார்.

“30விழுக்காடு தீமை விளைந்தது என்றால் 70விழுக்காடு நல்லது நடந்துள்ளது”.

மிக நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவரான மகாதிர் “நடைமுறைக்கேற்ப செயல்படுபவர்” என காசிம் வருணித்தார்.திறந்த மனம் கொண்டவர்.எதிரிகளாக இருந்தாலும் கலந்துபேச தயாராக இருப்பார்.

“டாக்டர் இன் த ஹவுஸ்(Doctor in the House) என்ற அவருடைய நூலில், அன்வாரை அருகில் வைத்துக்கொண்டே(அன்வாரை விலக்குவது பற்றி) பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதுதான் ஜனநாயகம்”, என்று 1998-இல் அன்வார் விலக்கப்பட்ட சம்பவம் பற்றிக் குறிப்பிட்டார்.

பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர் என்றால்  அது அப்துல்லா அஹமட் படாவிதான் என்கிறார் காசிம்.அவரிடம் கவரும் தன்மையோ உறுதியான கொள்கைகளோ கிடையாது.

“கூட்டங்களில் பெரும்பாலும் அவர் தூங்கி வழிவதைத்தான் படங்கள் காண்பிக்கும்”.

அம்னோ தலைவர்களிடம்  பலவீனங்கள் இருந்தாலும் அம்னோவின் புதிய தலைவர்கள்  கட்சியைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை காசிமுக்கு நிறையவே இருக்கிறது.

அப்படிப்பட்ட நம்பிக்கையைத் தரும் இருவரின் பெயர்களையும் அவர் தனியே குறிப்பிட்டார்.ஒருவர் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், இன்னொருவர் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா.

“ஆனால், அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு பத்தாண்டுக்காலமாவது தேவைப்படும்”, என்றார்.

TAGS: