பிரதமர் நஜிப் ரசாக் தேர்தலை நடத்துவதற்கு காத்திருப்பது நல்லது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
தேர்தலுக்குப் பொருத்தமான நேரம் எது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர்,” பின்னர் என்பது சரியாக இருக்கலாம். யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நஜிப், மதிப்பீடு செய்வதற்கு அது கால அவகாசத்தை வழங்கும்,” என்றார்.
“அரசியல் மூதறிஞர் துன் டாக்டர் மகாதீருடன் கலந்துரையாடல்” என்னும் தலைப்பைக் கொண்ட ஆர்டிஎம் நிகழ்ச்சிக்கு அவர் நேற்றிரவு பேட்டியளித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை களமிறக்குவதும் முக்கியம் எனவும் அவர் சொன்னார்.
மகாதீரை பேட்டி கண்ட மூவர் கொண்ட குழுவில் பெர்னாமா தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங், உத்துசான் குழும துணைத் தலைமை ஆசிரியர் 1, மலேசியா சரவாக் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் ஜெனிரி அமிர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
2013ம் ஆண்டுக்கு முன்னதாக நஜிப், தேர்தலுக்கான நேரத்தை நஜிப் முடிவு செய்ய வேண்டும். இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் அவர் தேர்தலை நடத்தக் கூடும் என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். என்றாலும் சிலர் அடுத்த ஆண்டில் தான் தேர்தல் நிகழும் எனக் கூறுகின்றனர்.
அரசியல் எதிர்ப்பாளர்களை முடக்குவதற்கு, கால வரம்பின்றித் தடுத்து வைக்க வகை செய்யும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
இணையப் பயனீடு அதிகாரித்துள்ள வேளையில் “நியாயமான வாதங்களை” கொண்டு மக்கள் மனத்தை கவருவதற்கு அரசாங்கம் முயல் வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துப் போராளிகளுக்கும் இடம் கொடுக்கும் வகையில் வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதே வேளையில் சுதந்திரத்துக்கு போராடுவதில் அம்னோ ஆற்றிய பங்கை மறக்கக் கூடாது என்றார்.
எல்லா இனங்களும் விட்டுக் கொடுக்க வேண்டும்
இந்த நாட்டில் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்பதை எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“அந்த உண்மையை எல்லா இனங்களும் ஏற்றுக் கொண்டால் இந்த நாடு அமைதியாக இருக்கும். அதனால் பொருளாதார வளர்ச்சியும் துரிதமடையும்.”
“தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என எந்த ஒர் இனமும் கோருமானால் அது மறைமுகமாக மற்ற இனங்களுடைய உரிமைகளை மறுப்பதற்கு இணையாகும். அதனால் இனங்களுக்கு இடையில் ஆரோக்கியமற்ற போட்டிகள் தலையெடுக்கும்.”
“பல இன நாட்டை நிர்வாகம் செய்வது, ஒர் இனத்தை மட்டும் கொண்ட நாட்டிலிருந்து மாறுபட்டது என நான் கருதுகிறேன். காரணம் பல்வேறு இனங்களும் கோரிக்கைகளை விடுப்பதாகும்,” என மகாதீர் குறிப்பிட்டார்.
2004 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் அறிமுகம் செய்த திறந்த போக்கின் விளைவாக பல குழுக்கள் சம உரிமை கோரியது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த போது முன்னாள் பிரதமர் அவ்வாறு கூறினார்.
பள்ளிக்கூடங்களில் தேசிய மொழியுடன் எல்லா இனங்களும் தங்கள் சொந்த மொழிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றும் அவர் சொன்னார்.
‘பள்ளிக்கூடங்களில் சொந்த மொழிகயைப் பயன்படுத்துவதற்கு சில பிரிவுகள் தெரிவித்த விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.”
பிஎன் உறுப்புக் கட்சிகள் இன்னும் நிறையச் செய்ய வேண்டும்
தற்போது சுறுசுறுப்பாக இல்லாத பிஎன் உறுப்புக் கட்சிகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த மகாதீர், அவை களத்தில் இறங்கி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயல வேண்டும் என்றார்.
“கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற கூட்டுறவு உணர்வு, மக்கள் இப்போது அனுபவிக்கும் சிறந்த சூழ்நிலையை உருவாக்கியிருப்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
“கடந்த 50 ஆண்டுகளாக கூட்டணி அரசாங்கம் மலேசியாவுக்கு வெற்றியைக் கொண்டு வந்துள்ளது,” என்றார் அவர்.
“ஆகவே நமக்கு வெற்றியைக் கொண்டு வந்த முறையை நாம் நிராகரிக்கக் கூடாது.”
“மக்கள் தவறான அரசாங்கத்தை தேர்வு செய்தால் நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்காது,” என்றும் மகாதீர் எச்சரித்தார்.