ஸ்கார்பின் கொள்முதல் மூலம் அம்னோ அதிக நன்மை அடைந்ததாக பிகேஆர் கூறுகிறது

பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட இரண்டு நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததின் மூலம் அதிக நன்மை அடைந்தது அம்னோவே என்று பிகேஆர் இன்று குற்றம் சாட்டியுள்ளது.

பெரிமெக்கார் சென் பெர்ஹாட், தெர்அசாசி லிமிடெட் போன்ற “டாக்சி நிறுவனங்கள்” வழி அம்னோ பணம் பண்ணியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

அந்த நிறுவனங்கள் பிரஞ்சு ஊழல் தடுப்புச் சட்டங்களை சமாளித்து “பணத்தை அங்கும் இங்கும் கொண்டு சென்று” அம்னோ மற்றும் அரசியல் பெரும்புள்ளிகளின் கரங்களுக்கு பணத்தை மாற்றி விட்டதாக அவர் சொன்னார்.

ஆயுதங்களை தயாரிக்கும் தாலெஸ் குழுமத்திடமிருந்து ( Thales Group ) பிரஞ்சுப் போலீசார் கைப்பற்றிய 153 ஆவணங்களில் ஒன்றான 37 எனக் குறிக்கப்பட்டுள்ள ஒர் ஆவணத்தின் அடிப்படையில் சுவா அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மூல ஆவணத்தை ஆசிய செண்டினல் ஆசிரியர் ஜான் பெர்த்தெல்சென் இணையத்தில் கசிய விட்டதாக நம்பப்படுகின்றது.