தியோ, அவரது உதவியாளர் மீது எம்ஏசிசி-யில் புகார் செய்யப்பட்டது

செர்டாங் எம்பி தியோ நீ சிங்-கின் உதவியாளர் 14,500 ரிங்கிட் வரையில் கையூட்டு பெற்றுள்ளதாக கூறப்படுவது  தொடர்பில் தியோவுக்கும் அவரது உதவியாளருக்கும் எதிராக நிபோங் திபால் எம்பி தான் தீ பெங் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளார்.

“கடந்த பிப்ரவரி மாதம் இன்னொரு தரப்பு சமர்பித்த புகாரைத் தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய நான் விரும்பினேன்,” என அவர் சொன்னார்.

“அதே நேரத்தில் எம்ஏசிசி நான் சமர்பித்த புதிய ஆதாரத்தையும் ஏற்றுக் கொண்டது,” என புத்ராஜெயாவில் எம்ஏசிசி அலுவலகத்துக்கு வெளியில் நிருபர்களிடம் கூறினார்.

2009ம் ஆண்டு தொடக்கம் தியோவின் உதவியாளரான சான் ஹுவான் குவான், அலுவலக மனை உரிமையாளரிடமிருந்து கூடின பட்சம் 14,500 ரிங்கிட் வரையில் கையூட்டு பெற்றுள்ளதாக தான் குற்றம் சாட்டினார்.

தியோ அலுவலகத்துக்காக  சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஆயிரம் ரிங்கிட் செலுத்தியதாகவும் அதில் 500 ரிங்கிட் கையூட்டாக சான்-க்கு 2009ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2011ம் ஆண்டு மே வரையில் 500 ரிங்கிட்கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சான் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து தான்-க்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். அந்த முன்னாள் பிகேஆர் எம்பி-க்கு எதிராக அவதூறு வழக்குப் போடப் போவதாகவும் அவர் மருட்டியுள்ளார்.

இருந்தும் தான், எம்ஏசிசி-யில் புகார் செய்துள்ளார். தம்மிடம் “உறுதியான ஆதாரம்” இருப்பதகாவும் அவர் தெரிவித்துள்ளார். தம்மை நீதிமன்றத்துக்கு தியோ இழுக்கலாம் என்றும் தான் குறிப்பிட்டார்.

“அவர் தவறு செய்யாதவராக இருக்கலாம். ஆனால் அது அவரது அலுவலகத்தில் நிகழ்ந்துள்ளது. அவர் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்,” என இப்போது சுயேச்சை எம்பி-யாக இருக்கும் தான் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

TAGS: