பினாங்கு செய்தியாளர்கள்: தேவை உண்மையான சீரமைப்பு

செய்தித்தாள்களுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு 27 ஆண்டுகள் கழித்து தாமதமாக வந்துள்ளது, ஆனாலும் அது போதுமானதல்ல என்கிறார்கள் பினாங்கு மாநிலச் செய்தியாளர்கள்.

பினாங்கு சீனச் செய்தியாளர், புகைப்படக்காரர் சங்கம்(பெவாஜூ), மெர்டேகா நாளில் வந்த நஜிப்பின் அறிவிப்பை வரவேற்றாலும் செய்தித்தாள் வெளியீட்டுக்கு உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கியிருக்கக்கூடாது என்று  கூறியது.

நஜிப், சீரமைப்பு பற்றிக் கூறியபோது நிறைய எதிர்பார்க்கப்பட்டது ஆனால், செய்தியாளர்களுக்கு சிறிதளவுதான் இதழியல் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதால் இந்தச் சீரமைப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றது குறிப்பிட்டது.

நஜிப் தகவல் உரிமைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்து உண்மையான சீரமைப்புகளைச் செய்திட வேண்டும் என்று அச்சங்கம் கேட்டுக்கொண்டது. 

“அரசாங்கம் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டிப்போடும்  அச்சக, பதிப்பக சட்டம்(பிபிபிஏ), அதிகாரத்துவ இரகசிய சட்டம், அரச நிந்தனைச் சட்டம் போன்றவற்றைக் கைவிடுவதன்வழி சீரமைப்பில் உண்மையில் அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிக்க வேண்டும்.”

பிரதமர் தமது மெர்டேகா தினச் செய்தியில், செய்தித்தாள்கள் ஒருமுறை மட்டும் பிரசுர உரிமம் பெற்றால் போதும் ஆண்டுக்கு ஆண்டு அதைப் புதுப்பிக்க வேண்டியதில்லை என்று அறிவித்தார். ஆனால், அந்த உரிமத்தை உள்துறை அமைச்சர் நினைத்தால் எந்த நேரத்திலும் ரத்துச் செய்யலாம்.

வேறு சில சீரமைப்புகளையும் அறிவித்த பிரதமர், அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டோரைக் காவலில் வைக்க அடிக்கடி பயன்பட்டு வந்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்  அகற்றப்படும் என்றும் கூறினார்.

நஜிப்பை விமர்சிப்போர் இந்தப் பிரகடனங்களுக்குச் சற்றுத் தயக்கமான வரவேற்பைத்தான் கொடுத்தார்கள். அவர்கள் சீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவதை முதலில் காண விரும்புகிறார்கள்.

பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ) மீட்டுக்கொள்ளப்படும் என்பதை வரவேற்ற பெவாஜு, ஐஎஸ்ஏ கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அச்சட்டத்தின்கீழ் இன்னமும் காவலில் உள்ளோருக்கு இழப்பீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

நஜிப்பின் பிரகடனம், ஒரு வாக்குறுதியாக இருந்தாலும் நாடாளுமன்றம் இன்னமும் அதற்கு ஓப்புதல் அளிக்கவில்லை என்பதால் எந்த நேரத்திலும் அது மீட்டுக்கொள்ளப்படலாம் என்றும் அது கூறியது.

சீரமைப்புகள் உண்மையில் எப்போது நடப்புக்கு வரும் என்பதையும் அரசு திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

ஊடகம் தொடர்பாகக் கூறப்பட்டவை, பொதுத்தேர்தலில் வாக்குகளைக் கவரும் வெறும் இனிப்புச் சொற்களாக, வெற்று வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது என்றது குறிப்பிட்டது.

“அதே வேளையில் அரசாங்கம்  வேறு வழிகளிலும், தேர்தலின்போது செய்தித்தாள் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, கட்சி அரசியல் பற்றிய செய்திகளின் அளவை வரைபறுப்பது போன்ற வழிகளிலும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தக்கூடாது.

“ஆளும் கட்சியுடன் தொடர்புகொண்ட செய்தித்தாள்களையும் ஆதரிப்போர்(வாங்குவோர்) வரி செலுத்துவோர்தான் என்பதால், மாற்றரசுக் கட்சியினரும் மாற்று அரசியல் கொள்கைகள் கொண்டோரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்”, என்றது கேட்டுக்கொண்டது.

TAGS: