புதிதாக பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 கொண்டு வரப்பட்டிருப்பதால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரை விடுவிக்க வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர் சங்கத் தலைவர் லிம் சீ வீ, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“கடந்தகாலச் சட்டங்கள் விட்டுசென்ற எதிர்மறையான எச்சத்திலிருந்து” நாட்டை விடுவிக்க அரசாங்கம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று லிம் கூறினார்.
“அதன் அடிப்படையில்தான் (பிரதமர் நஜிப்) தலையிட்டு இன்னமும் தடுப்புக் காவலில் உள்ள 45 பேர்களையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.இல்லையேல் தடுப்புக்காவல் உத்தரவு முடியும் காலம்வரை அவர்கள் காவலில் இருக்க வேண்டியதிருக்கும்.
“இன்னமும் தடுப்புக்காவலில் உள்ள 20மலேசியர்களையும் 25வெளிநாட்டவரையும் நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்ட வேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும்”, என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
கைதிகளில் சிலர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.வெளிநாட்டுக் கைதிகளில் பலர், மலேசியாவில் உள்ள அவர்கள் நாட்டுத் தூதரகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களாக உள்ளனர்.
“விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்கவும் ஐஎஸ்ஏ-யை அடியோடு எடுத்தெறியும் வகையிலும் அவர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும், தேவை என்றால் அவர்களை அவர்களின் நாட்டுக்கே திருப்பியும் அனுப்பலாம்”, என்று லிம் குறிப்பிட்டார்.