அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் திரெங்கானுவை தக்க வைத்துக்கொண்டால் அதன் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை மறுத்த அஹ்மட் ஷாபிரி சிக், அவ்வாறு கூறப்படுவதை மாநில அம்னோவின் ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்று வருணித்தார்.
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும் கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், மாநிலச் சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவதில் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றார்.
“(திரெங்கானு மந்திரி புசார்)அஹமட் சைட்டின் தலைமைத்துவம் சிறந்த ஒன்று என நம்புகிறேன்.அவர் மேலும் ஒரு தவணைக் காலம் தலைமைதாங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்”, என்று கெமமானில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்.
திரெங்கானு அம்னோவின் பிரச்னைகளுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே தீர்வு கண்டாயிற்று என்று கூறியவர், இப்போது பாஸும் பிகேஆரும்தான் பிரச்னைகளை எதிர்நோக்குகின்றன என்றார்.
“பாஸிலும் பிகேஆரிலும்தான் பிரச்னைகள் மோசமாக உள்ளன.பாஸில் அதே ஆட்கள்தான் பதவியைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆற்றல் வாய்ந்த அடுத்த கட்ட தலைவர்கள் அங்கு இல்லை”, என்று கூறியவர் திரெங்கானு அம்னோவில் நிலைமை அப்படி அல்ல என்றார்.