ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பலத்தைப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுவது மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் ஜுலை 5ம் தேதி தனது சொந்த விசாரணையைத் தொடங்கும்.
அந்தப் பேரணி தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களை சுஹாக்காம் ஆய்வு செய்து முடித்துள்ளதாக அதன் செயலாளர் ரோட்ஸியா அப்துல் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அந்தப் பேரணி தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த ஆவணங்கள், அறிக்கைகள், வீடியோ ஒளிப்பதிவுகள், சாட்சிகளின் அடையாளங்கள் ஆகியவற்றை 2012ம் ஆண்டு ஜுன் 21 வரையில் ஆணையம் ஆய்வு செய்துள்ளது.”
“ஏப்ரல் 28 பேரணியின் போது கடமையில் இருந்த போலீஸ் அதிகாரிகளை பேட்டி காணும் பொருட்டு தான் விடுத்த வேண்டுகோளுக்கும் அதற்கு பின்னர் அனுப்பப்பட்ட நினைவுக் கடிதத்திற்கும் போலீசாரிடமிருந்து ஆணையம் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது,” என்றார் அவர்.
அந்த விவகாரம் மீது அரசாங்க விசாரணைக்காக தான் காத்திருக்க முடியாது என்று கடந்த மாதம் அறிவித்த சுஹாக்காம், தனது விசாரணைக் குழுவையும் அதன் பணிகளையும் வெளியிட்டது.
தங்கள் விசாரணைக்கு உதவியாக பேரணி நிகழ்வுகள் பற்றிய ஆவணங்களைச் சமர்பிக்குமாறும் அது பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.
ஏற்கனவே முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு பெர்சே 3.0 குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சுஹாக்காமே அந்த விசாரணையை நடத்துவதற்கு பொருத்தமான அமைப்பு என்று கூறப்பட்ட போதிலும் அந்தக் குழுவின் விசாரணை தொடங்குவதற்கு அனுமதித்த அரசாங்கத்தின் மீது குறை கூறப்பட்டுள்ளது.
அரசாங்க விசாரணைக் குழுத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஹனீப், பெர்சே-க்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவரும் குறை கூறப்பட்டுள்ளார்.