சுன்னத்து ‘துன்பம் விளைவிக்கும் செயல்’ என்ற தீர்ப்பால் ஜெர்மனியில் சர்ச்சை

முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற ஆண் குறி முன் தோல் நீக்கமான விருத்தசேஷனம் (சுன்னத்து) தொடர்பில் ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

சுன்னத்து என்பது பிள்ளைகளுக்கு உடல்ரீதியான துன்பம் விளைவிக்கக்கூடிய ஒன்றாகப் போகலாம் என்றும், ஒப்புதல் வழங்க முடியாத அளவுக்கு சிறு வயது ஆண் பிள்ளைகளுக்கு மதக் காரணங்களுக்கான சுன்னத்து செய்வது சட்ட விரோதமானது என்றும் நீதிமன்றம் முடிவு தெரிவித்திருந்தது.

சம்பவம்

ஜெர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்துவைத்துள்ளனர். ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர் .

இந்நிலையில்தான் சுன்னத்து செய்த மருத்துவர் மீது சட்ட நடவடிக்கை அதிகாரிகள் கிரிமினல் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். ஆனால் அந்த மருத்துவரை நீதிமன்றம் விடுத்திருந்தது.

தீர்ப்பு

ஆனால் ஒப்புதல் வழங்கக்கூடிய வயது வராத ஒரு பிள்ளைக்கு மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது அப்பிள்ளைக்கு உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிற செயலாகும் என நீதிமன்றம் முடிவு தெரிவித்திருந்தது.

ஆகவே ஒப்புதல் வழங்கும் வயது வரும்வரை பெற்றோர்கள் தங்கள் விருப்பத்துக்கு அப்பிள்ளைக்கு சுன்னத்து செய்துவைக்க முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு பிள்ளை தன்னுடைய மதநம்பிக்கைகள் தொடர்பில் பிற்பாடு சுயமாக முடிவெடுப்பதற்கு இந்த சுன்னத்து தடையாய் இருக்கும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
ஜெர்மனியின் முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள்

ஜெர்மனியில் பெண்களுக்கு சுன்னத்து செய்வது சட்டவிரோதமான செயல் என்றாலும், ஆண்களுக்கு சுன்னத்து செய்வதென்பதற்கு சட்டத் தடை எதுவும் இல்லை.

சுமார் நாற்பது லட்சம் முஸ்லிம்களும் ஒன்றரை லட்சம் யூதர்களும் வாழும் நாடு ஜெர்மனி. பிள்ளை பிறந்த எட்டு நாளுக்குள் அதற்கு சுன்னத்து செய்கின்ற ஒரு வழக்கத்தை யூதர்கள் கடைபிடித்துவருகின்றனர்.
முஸ்லிம்கள் இளம் வயதிலெயே பிள்ளைக்கு சுன்னத்து செய்கிறார்கள் என்றாலும் எந்த வயதில் என்பது இடத்துக்கு இடம் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபடுகிறது.

சர்ச்சை

ஆண் பிள்ளைகளுக்கு சுன்னத்து செய்வதற்கு தடை விதிக்கும் விதமான இத்தீர்ப்பு மக்களுடைய மத சுதந்திரத்துக்கு எதிரான ஒரு தாக்குதல் என ஜெர்மனியின் முஸ்லிம் மற்றும் யூத சமூகங்கள் வாதிடுகின்றன.

இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு சுன்னத்துக்கு எதிரான தடை அல்ல என்றும். பிள்ளைக்கு ஒப்புதல் வழங்குவதற்குரிய வயதுவரும் வரை பெற்றோர் காத்திருக்க வேண்டும் என்பதாகத்தான் தற்போதைய தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சட்ட நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெர்மனியில் நேரடியாகவே சட்டமாகிவிடாது என்றாலும், இந்த வழக்கின் தீர்ப்பு பிற வழக்குகளிலும் பின்பற்றப்படலாம்.

சுன்னத்துகள் இடைநிறுத்தம்

இந்த சூழ்நிலையில்தான், பெர்லின் நகரின் யூத மருத்துவமனை தாங்கள் செய்யக்கூடிய சுன்னத்துகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் முன்னூறு சுன்னத்துகள் இந்த மருத்துவமனையில் நடக்கின்றன. அந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகம் மதக் காரணங்களுக்காக செய்யப்படும் சுன்னத்துகள்தான். ஏனையவை மருத்துவக் காரணங்களுக்காக செய்யப்படுபவை ஆகும்.

இந்த தீர்ப்பு வந்துள்ள நிலையில், சட்டம் என்ன சொல்கிறது என்ற தெளிவு ஏற்படாதாவரை சுன்னத்துகளை தாங்கள் செய்யப்போவதில்லை என்று அது கூறியுள்ளது.

அமைச்சர் கருத்து

மக்களின் மத ரீதியான உரிமைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்பளிக்கிற ஒரு தேசம் ஜெர்மனி என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கீதோ வெஸ்டெர்வெல் கூறியுள்ளார்.

ஜெர்மனி ஒரு சகிப்புத்தன்மை மிக்க நாடு என்றும், சுன்னத்து போன்ற மத ரீதியான பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்ககூடிய இடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.