நஜிப்புக்கு யார் செவி சாய்க்கிறார்கள் ? நிச்சயமாக இனவாதிகள் அல்ல.

“இனவாதக் கருத்துக்களை சொன்ன பின்னரும் தவறு செய்து விட்ட அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குடிமக்களாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு என்ன செய்தி அனுப்பப்படுகின்றது.”

நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் “அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்” சர்ச்சையை விரிவுபடுத்துகின்றது.

எஸ் வேலு: அந்த ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் இன வெறியர். அவர் தான் “தூக்கிலிடப்பட வேண்டும்”. அவரை ஏன் இன்னும் யாரும் அவையின் சலுகைகள் குழுவுக்கு அனுப்பாமல் இருக்கின்றனர்.

அந்த விவாதக் குறிப்புக்களைப் பார்க்கும் போது அம்பிகா ஸ்ரீனிவாசன் மீதான முகமட் அஜிஸின் கருத்துக்களை லெங்காகோங் எம்பி சம்சுல் அனுவார் நாஸாரா ஆதரித்துள்ளார். அதனால் அவரும் “தூக்கில் போடப்பட வேண்டும்”.

எல்லா இந்தியர்களும் விழித்துக் கொள்ள வேண்டும். மஇகா-வும் உரத்த குரலில் பேசும் அதன் எம்பி பி கமலநாதனும் அந்த இனவாத அவமானம் குறித்து எதுவுக் செய்யப் போவதில்லை என்பதால் நாம் அவர்களை வெளியேற்ற வேண்டும்.

கேஎஸ்என்: அம்பிகாவைத் தூக்கில் போட வேண்டும் எனச் சொன்னதே மிக கடுமையானது. நாம் அதனை விட மோசமான ‘பெண்டாத்தாங்’ (குடியேறிகள்) என்ற வாதங்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இனவாதக் கருத்துக்களை சொன்ன பின்னரும் தவறு செய்து விட்ட அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குடிமக்களாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு என்ன செய்தி அனுப்பப்படுகின்றது.

மசீச, மஇகா, பிபிபி ஆகியவை எதுவும் செய்ய முடியாது. காரணம் மற்ற பிஎன் பங்காளிகளின் (அம்னோ) உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரதமர் அவற்றுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

லிம் சொங் லியோங்: ‘pendatang’,‘awang hitam’ பற்றி பேசும் போது அந்த அம்னோ எம்பி ஏன் அம்பிகா பெயரைக் குறிப்பிட வேண்டும் ? ஆகவே அம்னோவில்  உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் இனவாதிகளே நிறைந்துள்ளனர்.

உங்கள் அடிச்சுவட்டில்: இந்தச் செய்தி எதனை உணர்த்த விரும்புகிறது என்பது எனக்குப் புரியவே இல்லை.அந்த விவாதக் குறிப்புக்களை முழுமையாக படிக்கா விட்டாலும் கூட அந்த எம்பி என்ன சொல்ல வருகிறார் என்பது அனைவருக்கு தெரிந்துள்ளது.

அந்த எம்பி சொன்னதில் உள்ள வேகத்தைக் குறைப்பதற்குக் கோமாளிகளே முயற்சி செய்வர். அந்த ஸ்ரீ காடிங் எம்பி-யின் நடத்தையைப் பாருங்கள், கனவான்களே, சீமாட்டிகளே !

அடையாளம் இல்லாதவன் #07443216: அம்னோ எம்பி-க்களில் சிலர் ஐந்தாம் படிவத்தைக் கூடமுடிக்காதவர்கள். சிலர் அதை விட மோசமாகவும் இருக்கலாம். அந்த எம்பி-க்கள் மக்களை நல்ல  முறையில் வழி நடத்துவர் என எப்படி எதிர்பார்க்க முடியும் ?

சாதாரண விஷயத்துக்குக் கூட தெளிவான எதிர் வாதத்தை அவர்களால் வைக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் “இந்த நாட்டில் நிகழ்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறு” என ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்பப் பாடுவார்கள்.

அனாக் ஜேபி: நம்முடைய அரசியல்வாதிகளில் சிலருடைய சிந்தனைகளும் போக்கும் வெறித்தனமாகவும் இனவாதமாகவும் இருக்கும் வேளையில் நாம் எப்படி ஒரு நாடாக முன்னேற முடியும் ?

அமெரிக்காவுக்கு இப்போது ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அதிபராகியிருக்கும் போது நாம் இன்னும் காலத்தால் பின் தங்கியுள்ளோம். பிரித்து வைக்கும் இனவாத அரசியலுக்குள் நாம் மூழ்கியிருக்கிறோம்.

நமது கல்வி முறை எத்தகையவர்களை உற்பத்தி செய்கிறது ? அந்த எம்பி பெரும்பாலும் பிடிஎன் என்ற தேசிய குடியியல் பிரிவின் தயாரிப்பாகத் தான் இருக்க வேண்டும்.

அம்னோவின் ஏகாதிபத்திய அரசியலினால் அதன் கூட்டணிப் பங்காளைக் கட்சிகள் 13வது பொதுத் தேர்தலில் துடைத்தொழிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. கெரக்கான் ஏற்கனவே போய் விட்டது. மசீச-வும் மஇகா-வும் பின் தொடரும்.

நியாயமானவன்: அந்த பத்து எம்பி தியான் சுவா நாட்டின் பாதுகாப்பு நிலை பற்றிப் பேசுகிறார். ஆனால் நமது அரை வேக்காடு எம்பி-க்கள், சுவா பாதுகாப்பு இல்லை என நினைத்தால் நாட்டை விட்டு வெளியேறலாம் எனச் சொல்கின்றனர்.

அந்த அரை வேக்காடு எம்பி-க்கள் மக்கள் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் தாக்கக் கூடாது.

அந்தக் கருத்துக்கள் உண்மையில் வெறித்தனமானவை, இனவாதத் தன்மை கொண்டவை. அத்தகைய எண்ணங்கள் சொன்னவரின் நடத்தையையே பிரதிபலிக்கிறது.

அடையாளம் இல்லாதவன்’ #43051382:மலேசியக் குடிமக்களுக்கு நாடு பாதுகாப்பாக இல்லை என்றால் ‘தனது வேலையை ஒழுங்காகச் செய்யாத’ பிஎன் அரசாங்கத்தை மக்கள் மாற்ற வேண்டும்.

 

TAGS: